சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமை நடைபெறும் வழக்குகள் இனி ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை மூலம் நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவித்துள்ளார்.
வழக்கத்தை மாற்றிய கொரோனா பரவல்!
கொரோனா பரவலை தொடர்ந்து, கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. முதலில் முக்கிய வழக்குகள் மட்டுமே ஆன்லைனில் விசாரித்து வந்த நிலையில் பின்னர் அனைத்து நீதிமன்ற வழக்கு விசாரணைகளும் ஆன்லைனில் நடைபெற்றன.
தேவையை பொறுத்து ஆன்லைன் விசாரணை!
அதன்பின்னர், தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, படிப்படியாக, நேரிடை விசாரணை முறைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், வழக்காடிகளின் வழக்கறிஞர்களின் தேவைகளை பொறுத்து, உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்குகள் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
உச்ச நீதிமன்றத்தை பின் தொடரும் உயர் நீதிமன்றம்!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அனைத்து வழக்குகளும் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை மூலமாகவே தற்போது நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் வாரத்தில் ஒரு நாள் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணைகள் மூலமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பு!
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்நீதிமன்ற அனைத்து வழக்கு விசாரணையும் வருகிற 3ஆம் தேதி முதல் வாரத்தில் ஒரு நாள் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்படும் எனவும் அதற்கான தேவையான அனைத்து வசதிகளும் எடுக்கபட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமைகளில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் ஆன்லைன் மூலமாகவும் விசாரணையில் ஆஜராகி வழக்குகளை எதிர்கொள்ளலாம் எனவும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.