ஈரான் | பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம் வைத்த மத அடிப்படைவாதிகள்

தெஹ்ரான்: ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் உடலில் நஞ்சு இருந்தது தெரிந்தது. மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள தகவலை ஈரான் கல்வித்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோம் பகுதியில் உள்ள தீவிர மதவாதிகள் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக விஷம் வைத்து இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்கு தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.

மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்வினையாக ஐ.நா.வின் பெண்கள் அமைப்பில் இருந்து ஈரான் நீக்கப்பட்டது. இந்த நிலையில் ஈரானில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.