நெல்லை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. மக்களுக்குப் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. சுகாதாரச் சீர்கேடு அதிகம் நிலவுவதாகப் புகார் இருப்பதால், தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நெல்லை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், பாதாளச் சாக்கடை பராமரிப்பு, கழிவுநீர் ஓடைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தேன்.
நெல்லையின் முக்கியமான சாலைகளை வேகமாகச் சரிசெய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டேன். நெல்லையப்பர் கோயிலின் பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடப்பதற்கு முன்பாக தேரோடும் சாலைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளும் பராமரிக்கப்பட்டு எந்தவித சிக்கலும் இல்லாமல் தேர் ஓட வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட சாலைகள் மிகவும் மோசமாகக் கிடக்கின்றன. அதனால் அவற்றை எல்லாம் விரைவாகச் சரி செய்து மக்களின் போக்குவரத்து சிரமம் இல்லாமல் இருக்கச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் 20 நாள்களுக்குள் அனைத்து சாலைகளையும் சரி செய்து கொடுக்காவிட்டால், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பாக மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவேன்.
தமிழகத்தில் மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பின்னர் நடந்த இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் எதுவும் வெற்றி பெற்றதே இல்லை. அதோடு, திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணம் ஈரோடு கிழக்குத் தொகுதியில் புழங்கியிருக்கிறது. வாக்காளர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்தை போட்டுக் காட்டியதுடன், பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன், அதனால் ஆளுங்கட்சி வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
தி.மு.க வாக்காளர்களை வாங்கிய நிலையில், பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியதே என்று கேட்கிறீர்கள். நாங்கள் எந்த மாநிலத்திலும் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியதில்லை. மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் அவர்களுக்குள் இருக்கும் குழுப் போட்டியின் காரணமாகவோ அல்லது பதவி ஆசையின் காரணமாகவோ சில எம்.எல்.ஏ-க்கள் தங்களின் கட்சியைவிட்டு வெளியே வந்திருக்கலாம். அதன் காரணமாகவே சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கக்கூடும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.