ஈரோடு கிழக்கு: காமராஜர் சொன்ன பஞ்ச் – நினைவுபடுத்திய ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈவெரா சாலையில் உள்ள அரசு மாநகராட்சி துவக்க பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைக்கும் வெற்றி!

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் இளங்கோவனுக்கு எனது வாக்கினை நான் செலுத்தியுள்ளேன். அதேபோல், ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பலப்படுத்தவும், அவரது 20 மாத நல்ல ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி கண்டிப்பாக அமையும்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டம்!

அதேபோல் ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு கண்டிப்பாக இருக்கும். வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் முடிவு அமையும். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்றைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ, அன்றைக்கே மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என, என் பெயர் அறிவிப்பதற்கு முன்பே மக்கள் முடிவு செய்துவிட்டனர். எனவே, மிகப்பெரிய வெற்றியாக இது அமையும்.

வாக்கு வித்தியாசம் எவ்வளவு?

வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது. இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக அமையும். எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதம் இல்லாமல், சில தேர்தல் அலுவலகங்களை மூடினார்கள். அனுமதி பெறாமல் நடைபெற்ற தேர்தல் அலுவலகங்களை மூடிவிட்டனர். எனவே, தேர்தல் நல்லபடியாக, நேர்மையாக நடக்கிறது.

காமராஜர் சொன்ன பஞ்ச்!

நான் வாக்களிக்கும் போது என் கையில் மை வைக்கப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் அப்படியே இருக்கிறது. தேர்தலில் காமராஜர் தோற்றபோது, அவரிடம் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை சரியில்லை என்று சொன்னார்கள். மை யாவது, மண்ணாங்கட்டியாவது. மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆகவே, அநாவசியமாக மை மீது குற்றச்சாட்டை வைக்காதீர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதே வாதம் இப்போதும் பொருந்தும்.

ஆதார் அட்டையை ஏன் ஏற்கவில்லை?

வாக்குச்சாவடியில் ஆதார் அட்டையை ஏன் ஆவணமாக ஏற்க மறுத்தார்கள் என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆளுங்கட்சியின் மீது, அவர்கள் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இருக்கிறார்கள்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.