ஈரோட்டில் 101 டிகிரி ஃபரான்ஹீட் வெப்பம் பதிவானது: வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதி

ஈரோடு: ஈரோட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலால் அவதி அடைந்து வரும் மக்கள் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மீள சாலையோர தர்பூசணி, பழச்சாறு, குளிர்பான கடைகளில் குவிகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் 101 டிகிரி ஃபரான்ஹீட் வெப்பநிலை பதிவானது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைப்பதால் ஏப்ரல் மே மாதங்களை எப்படி சமாளிக்கப் போகின்றோம் என்ற கலக்கத்தில் உள்ளனர்.

தேவைகளுக்காக வெளியே வரும் மக்கள் சாலை ஓரம் மரத்தடி நிழலில் இளைப்பாறி தர்பூசணிப்பழம் சாப்பிட்டு, இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு அருந்தி தாகத்தை தணிக்கின்றனர். வெயிலின் தாக்கத்தால் இப்போதே தர்பூசணி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏப்ரல், மே மாதங்களில் கொளுத்தும் கோடை வெயில் தற்போது பிப்ரவரி மாத இறுதியிலேயே அதிகரித்து வருவதால் செய்வதறியாது தவிக்கும் மக்கள் வெயிலை சமாளிக்க அரசு சார்பே ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.