கடந்த ஆண்டு ஜூன் 23, ஜூலை 11-ம் தேதிகளில் அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஜூலை-11ம் தேதியில் நடைபெற்ற பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மறுபுறம் பொருளாளர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில், “எடப்பாடி பழனிசாமி கூட்டிய இரண்டு பொதுக்குழு கூட்டங்களும் செல்லாது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் சேர்ந்துதான் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டார். இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாமல் போனது.
இதை எதிர்த்து எடப்பாடி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த செப் 2-ம் தேதி தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டங்கள் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் காரணமாக அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமி வசமே மீண்டும் வந்தது.
பின்னர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எடப்பாடி தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கான தீர்ப்பு கடந்த 23-ம் தேதி வழங்கப்பட்டது. அதில், “அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லும்” என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க தலைவர் அன்புமணி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு அதிக சந்தோஷம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் தற்போது தெரிவித்திருக்கும் கருத்துகளை அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், “எடப்பாடிக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருப்பது அ.தி.மு.க-வினரை உற்சாகமடையச் செய்திருக்கிறது. மதில் மேல் பூனையாக இருந்த அ.தி.மு.க தொண்டர்களுக்கு நிச்சயமாக உற்சாகம் கொடுத்திருக்கிறது. மேலும் பல தொண்டர்கள் அவர் பக்கம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஈரோடு கிழக்கில் வேலை செய்யும் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இது ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும். ஆனால் ஓட்டு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். இது தவிர பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சந்தோஷம் அதிகமாக இருக்கிறது. முன்னதாக அவர் எடப்பாடிக்கு ஆதரவாக தொடர்ந்து காய் நகர்த்தி வந்தார். ஓ.பி.எஸ்-க்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை.
இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தோஷத்தில் இருக்கிறார். அவர், `உச்ச நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று அளித்திருக்கும் தீர்ப்பானது, அந்தக் கட்சியினருக்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்திருப்பதால் அவர்களின் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்திருப்பதைப் பார்க்க முடிந்தது.
இதைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார். அவர், “அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, இன்று அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரின் வலுவான ஆளுமைக்குச் சான்றாக இருக்கிறது. அவருக்கு எமது வாழ்த்துகள்.
இந்த வாய்ப்பு மீண்டும் பா.ஜ.க-வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே” எனத் தெரிவித்திருக்கிறார். இதில் எந்த அடிப்படையில் எடப்பாடியை ஆளுமைமிக்க தலைவர் என்று திருமா சொல்கிறார் எனத் தெரியவில்லை. எதற்காக இவ்வளவு சந்தோஷமாக கருத்து தெரிவித்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை இப்படி பேசினால் வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க-விடம் அதிக சீட்டுகள் பெறலாம் என நினைக்கிறாரா எனத் தெரியவில்லை.
எனவே தான் இந்த சந்தோஷத்தை நாம் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கிறோம். அவருக்கு பா.ஜ.க-வுக்கும் – எடப்பாடிக்கும் இருக்கும் தொடர்பு நன்றாகவே தெரியும். எடப்பாடி எந்த ஆளுமையைக் காட்டினார் என்று தெரியவில்லை. ஜே.என்.யு-வில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட போதுகூட எடப்பாடி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடவில்லை.
கவர்னர் கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்கள் குறித்தும் கேட்கவில்லை. இவற்றுக்கெல்லாம் தைரியம் இல்லாத எடப்பாடியை எந்த அடிப்படையில் ஆளுமைமிக்க தலைவர் என்று திருமா சொல்கிறார் என்று தெரியவில்லை. இது குறித்த முழு விவரம் வரும் காலங்களில் தெரியவரும். இதே போல் பா.ம.க தலைவர் அன்புமணி, தே.மு.தி.க-வுக்கும் இதில் சந்தோசமும் அரசியல் கணக்குகளும் இருக்கின்றன” என்றார்.