குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! வைரலாகும் போஸ்டர்!

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரிலுள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன். இவருக்கு தற்போது 53 வயதாகிறது. கடந்த 32 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விடவேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து, கடந்த ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. 2022ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, மதுவை விட்டொழித்த இவர், ஒரு வருடம் நிறைவடைந்ததை நினைவில் வைத்துக் கொண்டு, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடி வருகிறார். 

அந்த போஸ்டர் அடிக்க ஒரு உபயதாரரை வேறு தேடிக் கண்டுபிடித்துள்ளார் மனோகரன். இதுகுறித்து  மனோகரன் கூறுகையில் , குடிப்பழக்கத்தால் தனது மரியாதையை, ஊரில் மட்டுமின்றி சொந்த வீட்டிலும் இழந்திருந்ததாகக் கூறுகிறார். ஒரு நாளைக்கு குறைந்தது 300 முதல் 400 ரூபாய் வரை குடிக்கு செலவிட்டதால், வீட்டு மனை ஒன்றையே விற்க நேரிட்டதாகவும் நொந்து கொள்கிறார் மனோகரன். தற்போது அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டதால், வீட்டிலும் ஊரிலும் மரியாதை கூடியுள்ளது எனவும் உடல் நலமும் சீராக உள்ளதாகவும் தெரிவித்தார். 

குடியின் சீரழிவுகளை மற்றவருக்கு உணர்த்தவே, சிலர் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை என போஸ்டர் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கூறினார்‌. ‘குடிப்பவர்கள் திருந்தினால் மதுக்கடைகளை அரசாங்கம் தானாக மூடும்’ என்ற இந்த முன்னாள் மதுப் பிரியரின் வார்த்தைகள், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றால் அது மிகையில்லை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.