கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனை ஒன்றில், இடது காலில் வலி இருப்பதாக சொன்ன நோயாளிக்கு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் மருத்துவர். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளி தற்போது புகார் கொடுத்துள்ளார். மருத்துவரின் கவனக்குறைவால் அந்த நோயாளி இப்போது பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நோயாளியின் பெயர் சஜினா சுகுமாரன். 60 வயதான அவரது இடது காலில் வலி இருந்துள்ளது. கதவுக்கு இடையில் கால் சிக்கியதால் இந்த பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது. வலி இருந்த காரணத்தால் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் பெஹ்ரிஷன் நடத்தி வரும் கிளினிக்கில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இருந்தபோதும் வலி குறையவில்லை.
மருத்துவரின் அறிவுறுத்தலின்படி கோழிக்கோடு பகுதியில் உள்ள நேஷனல் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு கடந்த 20-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் பெஹ்ரிஷன், நோயாளியின் வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். நோயாளிக்கு நினைவு திரும்பியதும் வலது காலில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இத்தனைக்கும் அந்த மருத்துவர்தான், நோயாளி சஜினாவுக்கு எட்டு மாதங்களாக சிகிச்சை கொடுத்து வந்துள்ளார்.
முதலில் மருத்துவரின் கவனக்குறைவை ஏற்க சம்பந்தப்பட்ட மருத்துவமனை மறுத்துள்ளது. இது தொடர்பாக புகாரும் பாதிக்கப்பட்டவரின் தரப்பில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சஜினா, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.