கோலிவுட் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை… ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் சாதனை படைத்த லியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த, கவுதம் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக, படக்குழு தற்போது காஷ்மீரில் ஷூட்டிங் வேலைகளை படு மும்முரமாக நடத்தி வருகிறது. அக்டோபர் 19ம் தேதி என படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வெளியிட்ட ப்ரோமோ வீடியோவுக்குப்பின், தற்போதுவரை வேறு எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் படக்குழு தரப்பில் இருந்து வரவில்லை.

இந்த நிலையில், லியோ படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டு மகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அந்த பதிவே வைரலாகி வரும் நிலையில், தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவதற்கு முன்பே அது செய்திருக்கக் கூடிய வியாபாரம் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பிரபல சினிமா செய்தி தளமான பிங்க்வில்லா செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதன்படி தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரிலீசுக்கு முன்பே 400 கோடி ரூபாய் பிசினஸ் பார்த்த ஒரே படம் என்ற மைல் ஸ்டோனை லியோ எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தியேட்டர் ரிலீஸ் மட்டுமல்லாமல் டிஜிட்டல் தளங்களுக்கான உரிமைகள் மூலமாக மட்டுமே, லியோ படத்துக்கான வியாபாரம் 240 கோடியாக இருக்கின்றதாம்.

விரிவாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுக்கான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 120 கோடி ரூபாய்க்கு லியோ படத்தை வாங்கியிருக்கிறதாம். அடுத்தபடியாக சாட்டிலைட் உரிமத்தை பெற்ற சன் டிவி 70 கோடி ரூபாய்க்கு படத்தை பெற்றிருக்கிறது. தொடர்ந்து பாடல்களுக்கான உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் 18 கோடி ரூபாய்க்கும், இந்தி டப்பிங் சாட்டிலைட் உரிமம் 30 கோடி ரூபாய்க்கும் பேசப்பட்டிருக்கிறதாம்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் செட் மேக்ஸ் அல்லது கோல்ட்மைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபோக, உலகம் முழுமைக்குமான லியோ படத்தின் திரையரங்க உரிமங்கள் மட்டுமே 175 கோடி ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். இதில் ஓவர் சீஸில் 50 கோடி ரூபாய்க்கு விற்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும் வேளையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 75 கோடி ரூபாயும், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் 35 கோடி ரூபாயும், எஞ்சிய மாநிலங்களுக்கெல்லாம் 15 கோடி ரூபாயும் கேட்கப்பட்டிருக்கிறதாம்.

ஏற்கெனவே லியோ படம் லோகேஷ் கனகராஜின் யூனிவெர்ஸுக்குள் வருமா வராதா என்பதை ஓயாமல் ரசிகர்கள் தங்களது பதிவுகள் மூலம் கேட்டு வரும் நிலையில், தற்போது படத்தின் ப்ரி-ரிலீஸ் வியாபாரம் 400 கோடியை எட்டியிருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு யாவும் ரசிகர்களுக்கு மேன்மேலும் அதிகரிக்கவே போகிறது என்பதில் ஐயமில்லை.

அதேவேளையில் லியோ படம் அதிகாரப்பூர்வமாக LCUக்குள் வரும் என அறிவிக்கும்பட்சத்தில், அதன் வியாபாரம் இன்னும் விரிவடையவும் வாய்ப்புள்ளதாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.