தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும் பொது நூலக இயக்கமும் இணைந்து நடத்திய சிறுவாணி இலக்கியத் திருவிழாவானது கோவை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதற்கு முன்னர், இந்த இலக்கியத் திருவிழாவானது சென்னை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. இனி, மேலும் பல இடங்களில் நடைபெறவுள்ளது. தற்போது கோவையில் நடைபெற்ற இவ்விழாவின் தொடக்க நிகழ்வில் நடிகர் சிவகுமார், எழுத்தாளர்கள் எஸ்.வி. ராஜதுரை, பவா செல்லதுரை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
“அரசியல் சமூக வாழ்க்கையானது இலக்கியத்துடன் இணைந்து பிரிக்க முடியாததாக உள்ளது. இலக்கியமானது சமூக உணர்வியலோடும், அழகியலோடும் அமைய வேண்டும்”, என்று எஸ்.வி.ராஜதுரையும்,”அரசுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இடையேயான இடைவெளி இத்தகைய விழா மூலம் தகர்க்கப்படுகிறது”, என்று பவா செல்லதுரையும் பேசினார்கள்.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன், ச.பாலமுருகன், மரபின் மைந்தன் முத்தையா, ஸ்டாலின் குணசேகரன், பொதியவெற்பன், அ.ராமசாமி உள்ளிட்ட 44 இலக்கிய ஆளுமைகள் பங்குபெற்ற 31 அமர்வுகள் நடைபெற்றன. பேராசிரியர் ராம்ராஜ் அவர்களின் நாடகமும், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் நாடகக் குழுவினரின் நாடகமும் காண்போருக்கு நல்விருந்து அளித்தது. இவ்விழாவின் நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் எழுத்தாளர் சிற்பி. பாலசுப்பிரமணியமும் பங்கு பெற்றுச் சிறப்பித்தனர்.
இவ்விழாவின் நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் எழுத்தாளர் சிற்பி. பாலசுப்பிரமணியமும் பங்கு பெற்றுச் சிறப்பித்தனர். அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “இரண்டு நாள் இலக்கியத் திருவிழாவானது எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெற்றுள்ளது.
கொங்குப் பகுதி வணிகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றதுபோல, இலக்கியத்திற்கும் புகழ்பெற்ற பகுதியாக விளங்குகிறது. இங்கிருந்து பல ஆளுமைகள் உருவாகி தமிழ் இலக்கியப் பரப்பிற்கு பெருமை சேர்த்துள்ளனர். உலகின் இரண்டாவது சுவையான நீர் சிறுவாணி. அதுபோல, இப்பகுதி மக்களும் இனிமையானவர்கள்”, என்றார்.
இந்த விழாவில் பங்கு கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் பேசுகையில், “இவ்விழாவானது, நிறைய ஆளுமைகளைச் சந்திப்பதற்கான வாய்ப்பையும், அவர்தம் உள்ளக்கருத்தை மனக்குகையிலிட்டு சிந்திப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தது. வாசகர்கள் சரியான நூல்களை இனங்கண்டு வாசிப்பதற்கு இத்திருவிழா வழிகாட்டியாக அமைந்தது”, என்றனர்.