கேப்டவுன்,
10 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 2 வாரங்களாக தென்ஆப்பிரிக்காவில் நடந்து வந்தது. இதில் கேப்டவுனில் நேற்று அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவும் மல்லுக்கட்டின. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி விக்கெட் கீப்பர் அலிசா ஹீலியும், பெத் மூனியும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். இறுதி ஆட்டம் என்பதால் எச்சரிக்கையுடன் ஆடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் (5 ஓவர்) எடுத்து பிரிந்தனர். அலிசா ஹீலி 18 ரன்னில் கேட்ச் ஆனார். 6-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் மெய்டனாக வீசி அசத்தினார்.
2-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த ஆல்-ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னெர், வேகப்பந்து வீச்சாளர் நடினே டி கிளெர்க்கின் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் விரட்டி ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தினார். கார்ட்னெர் தனது பங்குக்கு 29 ரன்கள் (21 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) திரட்டினார். இதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் ரன்வேகம் கொஞ்சம் குறைந்தது. கிரேஸ் ஹாரிஸ், கேப்டன் மெக் லானிங் தலா 10 ரன்னில் வீழ்ந்தனர்.
இன்னொரு பக்கம் நெருக்கடிக்கு மத்தியில் நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய மெத் மூனி பவுண்டரியுடன் தனது 18-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும் பெத் மூனி அரைசதம் அடித்திருந்தார். இதன் மூலம் 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இரண்டு அரைசதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
அணி சவாலான ஸ்கோரை அடைய வித்திட்ட பெத் மூனி, இறுதி ஓவரில் சிக்சர், பவுண்டரியுடன் 150-ஐ தாண்ட வைத்தார். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. பெத் மூனி 74 ரன்களுடனும் (53 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), தாலியா மெக்ராத் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முன்னதாக எலிஸ் பெர்ரி 7 ரன்னில் கேட்ச் ஆனார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில், மரிஜானே காப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து 157 ரன் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்த்தும், தஸ்மின் பிரிட்சும் அடியெடுத்து வைத்தனர். ஆரம்பத்தில் ஒருவித பதற்றத்துடன் தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள் விளையாட, அதை சரியாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய பவுலர்கள் மிரட்டினர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 3 பவுண்டரி மட்டுமே வழங்கி சிக்கனத்தை காட்டினர். தஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்னிலும், அடுத்து வந்த மரிஜானே காப் 11 ரன்னிலும், கேப்டன் சன் லூஸ் 2 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அப்போது தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 54 ரன்களுடன் (10.4 ஓவர்) தள்ளாடியது.
இதைத் தொடர்ந்து லாரா வோல்வார்த் மட்டையை அதிரடியாக சுழற்றினார். தாலியா மெக்ராத், வார்ஹாம் ஓவர்களில் சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். நெருக்கடியும் ஓரளவு குறைந்தது.
ஆனால் முக்கியமான கட்டத்தில் லாரா வோல்வார்த் (61 ரன், 48 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) மேகன் ஸ்கட்டின் பந்து வீச்சில் முட்டிப்போட்டு விரட்ட முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. அவரது விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. அதன் பிறகு சோலே டிரையான் (25 ரன்) கிளீன் போல்டாக, அத்துடன் தென்ஆப்பிரிக்காவின் நம்பிக்கை முற்றிலும் சீர்குலைந்தது.
கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 27 ரன் தேவைப்பட்ட போது, சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லி கார்ட்னெர் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 20 ஓவர் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 137 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடியது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் அந்த அணி கோப்பையை கையில் ஏந்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
அரைசதம் அடித்த ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஆட்டநாயகி விருதையும், ஆல்-ரவுண்டராக பிரகாசித்த ஆஷ்லி கார்ட்னெர் (110 ரன் மற்றும் 10 விக்கெட்) தொடர்நாயகி விருதையும் பெற்றனர். உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வது இது 6-வது முறையாகும். ஏற்கனவே 2010, 2012, 2014, 2018, 2020-ம் ஆண்டுகளிலும் கோப்பையை உச்சிமுகர்ந்திருந்தது.
அதே சமயம் முதல்முறையாக இறுதிசுற்றுக்கு முன்னேறி,நெருங்கி வந்து கோப்பையை கோட்டை விட்ட ஏமாற்றத்தில் டிரையான் உள்ளிட்ட ஒரு சில தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள் கண்ணீர் விட்டு அழுதனர். 9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு (2024) செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வங்காளதேசத்தில் நடைபெறும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வீறுநடை தொடருகிறது. பெண்கள் 50 ஓவர் உலகக் கோப்பையில் 7 முறை, 20 ஓவர் உலகக் கோப்பையில் 6 முறை, ஆண்கள் 50 ஓவர் உலகக் கோப்பையில் 5 முறை, 20 ஓவர் உலகக் கோப்பையில் ஒரு முறை, சாம்பியன்ஸ் கோப்பையில் 2 முறை என்று ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தத்தில் 21 ஐ.சி.சி. கோப்பைகளை வென்று சாதனை படைத்திருக்கிறது.