சைலண்டான சைதை சாதிக்… நேரடி ஆக்‌ஷனில் குஷ்பு; திமுகவை டார்கெட் செய்கிறதா டெல்லி?

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி பேசுபொருளாக மாறியுள்ளது. இவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். விரைவில் டெல்லி சென்று பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் விவகாரம் தான் நினைவுக்கு வருகிறது.

சைதை சாதிக் பேச்சு

ஏனெனில் கடந்த ஆண்டு சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சைதை சாதிக், குஷ்பு உள்ளிட்ட 4 நடிகைகளை ஒருமையில் பேசினார். மேலும் இரட்டை அர்த்தத்திலும் பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். இதுபோன்ற ஆண்கள் பெண்ணின் கருப்பையை அவமதிக்கின்றனர். தங்களை கலைஞரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

குஷ்பு ஆவேசம்

இதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா? எனக் கேள்வி எழுப்பினார். சைதை சாதிக் மீது
மு.க.ஸ்டாலின்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்று தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார் அளித்தார். தனது புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளனர் என்று கூறினார். இது நடந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால் எந்த ஒரு தரப்பில் இருந்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மன்னிப்பு கேட்ட கனிமொழி

திமுகவை பொறுத்தவரையில் கனிமொழி மட்டும் மன்னிப்பு கேட்டிருந்தார். அதன்பிறகு சைதை சாதிக்கிடம் உரிய விளக்கம் கேட்கப்படும். இதுபோன்ற பேச்சுகள் மீண்டும் எழாமல் பார்த்து கொள்ளப்படும் என்றெல்லாம் திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதோ, பதவி பறிக்கப்பட்டதோ போன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

திமுகவிற்கு டார்கெட்

இந்நிலையில் தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். எனவே முடங்கி கிடக்கும் சைதை சாதிக் புகாரை தூசு தட்டுவாரா குஷ்பு? விரைவில் நடவடிக்கை பாயுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சி பிரமுகர்கள் பெண்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சையாக பேசி விடுகின்றனர்.

இவர்களை குறிவைத்து டெல்லியில் இருந்து குஷ்பு இனிமேல் குடைச்சல் கொடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக திமுகவை டார்கெட் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சில சமயங்களில் பாஜக தரப்பில் இருந்தும் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிவிடுகின்றனர். அவர்கள் மீது குஷ்பு நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.