தமிழ்நாடு சட்டசபையில் மார்ச் 20 ஆம் தேதி 2023-2024 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று, செயல்படுத்தப்படாமல் இருக்கும் முக்கிய வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இல்லை.
குறிப்பாக, ” நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித் துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல்” உள்ளிட்ட வாக்குறுதிகளை சொல்லலாம். இந்நிலையில், மார்ச்சில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது.
ஈரோட்டு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர்
ஸ்டாலின்
அதற்கான முன்னறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. நான் முதலமைச்சராக தேர்வு பெற்று கோட்டைக்குச் சென்று 5 கையெழுத்துகள் போட்டேன். அதில் ஒன்றுதான் மகளிருக்கான இலவச பேருந்து. இந்தியாவிலேயே எங்கும் கிடையாது. மகளிருக்கு கட்டணமில்லா இலவசப் பயண பேருந்து திட்டம் தமிழகத்தில் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கிய அரசு திமுக அரசு. விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் வழங்கிய அரசு திமுக. சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வதுதான் திமுக அரசு என முதல்வர் கூறினார்.
மேலும், பெண்களுக்கு உரிமை தொகை வழங்க கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன். அதிமுக அரசு கஜானாவை காலி செய்து விட்டது. அதை நாங்கள் சரி செய்து வருகிறோம். மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அந்த அறிக்கையில் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என தெரிவிக்கப்படும். 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். 15 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே உள்ளன என இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். இருப்பினும், இந்த திட்டம் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் செல்லுமா என்பதில்தான் விஷயமே உள்ளது.
பட்ஜெட்டில் உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டால், 5 சவரன் நகை கடன் தள்ளுபடியில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை போல இதற்கும் விதிக்கப்படலாம் என்கின்றனர். அதாவது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு 50 சதவீத பயனாளிகளுக்கு மட்டும் அரசு இந்த தொகை கிடைக்கும்படி செய்யலாம்.