திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நால்வரின் சைவத் திருமுறைகளை 27 நிமிடங்களில் பரதநாட்டிய வடிவில் நிகழ்த்திய 301 கலைஞர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சமயக்குரவர் நால்வரின் சைவத் திருமுறைகளை 301 கலைஞர்கள் பரதநாட்டிய வடிவில் 27 நிமிடங்களில் நடத்தி உலக சாதனை படைத்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கலையரங்கத்தில், பரதநாட்டிய கலைஞர்களின், ‘நால்வரின் பொற்றாள் பணிவோம்’ உலக சாதனை முயற்சியாக தொடர் உலக சாதனை நாட்டிய விழா நேற்று மாலை நடந்தது. அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை கொரட்டூரை சேர்ந்த ஸ்ரீசங்கர நாட்டிய வித்யாலயா ஒருங்கிணைப்பில், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், காரைக்குடி, திண்டிவனம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நாட்டியப் பள்ளி மாணவிகள் 301 பேர் பங்கேற்றனர்.

சமயக்குரவர் நால்வர் என அழைக்கப்படும் திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் சைவ திருமுறைகளை பரதநாட்டிய வடிவில், மாணவிகள் 301 பேர் 27 நிமிடங்களில் நிகழ்த்தி காட்டினர். நேற்று மாலை 5.20 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சி, மாலை 5.47 மணிக்கு நிறைவடைந்தது. அப்போது, நால்வரின் திருமுறை பாடல் வரிகளை, பரதநாட்டிய கலைஞர்கள் தங்கள் பரத கலை வடிவின் மூலம் வியப்பூட்டும் வகையில் வெளிபடுத்தினர். நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடன கலைஞர்கள் அனைவரும், திருமுறை பாடல்களுக்கு தகுந்தபடி ஒரே மாதிரியான நாட்டிய அபிநயங்களை வெளிபடுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நால்வரின் சைவ சமய திருமுறைகளை பரத நாட்டிய வடிவில் அதிக எண்ணிக்கையிலான பரதநாட்டிய கலைஞர்கள் 27 நிமிடங்களில் நிகழ்த்தி காட்டியதை, உலக சாதனைகளை அங்கீகரிக்கும் நிறுவனமான ‘ராபா புக் ஆப் வேல்டு ரெக்கார்டு’ அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற 301 பரத கலைஞர்களுக்கும் தனித்தனியே சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. அதேபோல், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஸ்ரீசங்கர நாட்டிய வித்யாலயாவின் சங்கீதா சிவக்குமார் மற்றும் பல்வேறு நாட்டியப் பள்ளி பயிற்சியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.