புதுடெல்லி: பல சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், அரசியல் அழுத்தம் காரணமாக மணிஷை கைது செய்ய அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சிசோடியா கைது குறித்து திங்கள்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், “பெரும்பாலன சிபிஐ அதிகாரிகள் மணிஷின் கைதுக்கு எதிராக இருந்ததாக என்னிடம் கூறப்பட்டது. அந்த அதிகாரிகள் மணிஷ் சிசோடியா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. ஆனாலும் அவர் கைது செய்யப்படவேண்டும் என்று அதிகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனால் அதிகாரிகள் தங்களின் அரசியல் எஜமானர்களுக்கு கட்டுப்பட்டு இதைச் செய்துள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த ட்வீட்டை டேக் செய்துள்ள பாஜக எம்பி மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில்,”குஜராத் தேர்தலின் போதும் புலனாய்வு அமைப்பின் (ஐபி) மீது இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்பினீர்கள். இப்போது நீங்கள் சொல்வதும் எழுதுவதும் கட்டுக்கதை என்பது அனைவரும் அறிந்தததே. சட்டம் அதன் பணியைச் செய்யட்டும். மது அமைச்சரின் மது ஊழல் மீதான விசாரணை இனி சூடுபிடிக்கும். இதுவும் உங்களுக்கு பயம்தானே..” என்று இந்தியில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இது கேவலமான அரசியல் என்றும் மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசால் கடந்த 2021-22-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கை தனியார் நிறுவனங்கள் பயனடையும் வகையில் இருந்ததாகவும், இதற்கு பிரதிபலனாக பலகோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு, புதியமதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு ரத்து செய்தது. இந்தநிலையில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ முன்பு ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனை ஏற்று காலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு வந்த மணிஷ் சிசோடியாவிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில், அவரிடமிருந்து கிடைத்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இரவு முழுவதும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மணிஷ் சிசோடியா, மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தத்தப்படுவார்.