பிரதமர் மோடியின் திட்டங்களால் இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு: வானதி சீனிவாசன் பெருமிதம்

மதுரை: பிரதமர் மோடியின் பெண்கள் நலத் திட்டங்களால் பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரித்துள்ளது என பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் பேசினார்.

பாஜக தேசிய மகளிரணி சார்பில் ‘ஒரு கோடி மத்திய அரசு பெண் பயனாளிகளுடன் செல்பி எடுக்கும் திட்டம்’ நாடு முழுவதும் இன்று (பிப்.27) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டங்களில் கிராமங்களில் 2 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 80 சதவீதம் வீடுகள் பெண்கள் பெயரில் உள்ளன. இதனால் பெண்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் 65 சதவீத பயனாளிகள் பெண்கள். உஜ்வாலா திட்டத்தில் 9 கோடி பேர் பெண்கள். நாடு முழுவதும் 48 கோடி வங்கி கணக்கு தொடங்கப்பட்டதில் 45 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். மத்திய அரசு திட்ட பெண் பயனாளிகளுடன் பாஜக மகளிரணியினர் செல்பி எடுத்து அவற்றை நமோ செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் பெற்றோர்களிடம் இதுவரை இருந்து வந்த தயக்கம் குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 1020 பெண்கள் என்ற ரீதியில் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். ஒரு எம்பி தொகுதியில் 20 ஆயிரம் பெண்களுடன் பாஜக மகளிரணியினர் செல்பி எடுத்து நமோ செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவராக பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் கைகளில் வாய்ப்புகளை கொடுத்தால் நாடு, வீடு, சமூகம் முன்னேறும் என பிரதமர் மோடி நம்புகிறார். அவரது நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், மாநில செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாநில மகளிரணி தலைவர் உமாரவி, மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவி ஓம் சக்தி தனலட்சுமி, மாவட்ட துணை தலைவர்கள் ஜெயவேல், குமார் சத்தியம் செந்தில்குமார், மீனா, பொதுச் செயலாளர்கள் துரை பாலமுருகன், வினோத்குமார், பொருளாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.