புதுடெல்லி: புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து முதல்வர் கேஜ்ரிவாலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கால், டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது. இதனால், ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கைகளுடன் ஆட்சி நிர்வாகமும் பாதிக்கப்பட்டு முதல்வர் அர்விந்த் கேர்ஜிவாலுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தென் இந்திய மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலபதிர்கள் பலனடையும் வகையில் டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அறிவிக்கப்பட்டதாகப் புகார் இருந்தது. இதன் மீதான சிபிஐ விசாரணையில் தொழிலதிபர் உள்ளிட்டோர் கைதுகள் தொடர்கின்றன.
டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியாவும் நேற்று சிபிஐயால் கைது செய்யப்பட்டிருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சிசோடியா, முதல்வர் அர்விந்த் கேர்ஜிவாலுக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால், சிசோடியாவின் கைது ஆன ஆம் ஆத்மி கட்சிக்கும், முதல்வர் கேஜ்ரிவாலின் அரசு நிர்வாகத்திற்கும் பெரும் பின்னடைவை உருவாக்கி விட்டது. ஆம் ஆத்மி ஆளும் டெல்லி அரசின் இரண்டாவது முக்கிய நபராக இருப்பவர் துணை முதல்வர் சிசோடியா. இவரிடம், டெல்லியில் மொத்தம் உள்ள 33 அரசுத் துறைகளில் 18 துறைகள் உள்ளன. இவற்றில் கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், பொதுப்பணி உள்ளிட்ட முக்கியத்துறைகள் பலவும் இடம் பெற்றுள்ளன. சிசோடியாவிற்கு கடந்த பிரவரி 19 இல் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது முதல் அவர் கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
இதன் காரணமாக, தம் சக அமைச்சரான கைலாஷ் கெல்லோட்டை சிசோடியாவின் துறைகளில் கவனம் வைக்க அறிவுறுத்தி இருந்தார் முதல்வர் கேஜ்ரிவால். அமைச்சர் கெல்லோட்டிடமும் போக்குவரத்து, சட்டம் உள்ளிட்ட முக்கிய ஆறு துறைகள் உள்ளன. இனி அமைச்சர் கெல்லோட், கைதான சிசோடியாவின் துறைகளை கூடுதல் பொறுப்பாக வகிக்கிறார். ஏனெனில், தன் கட்சியை வளர்ப்பதற்காக வேண்டி முதல்வர் கேஜ்ரிவால், துவக்கம் முதல் தன்னுடன் ஒரு அரசு துறையும் வைத்துக் கொள்ளவில்லை. இதற்குமுன் மருத்துவநலத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும் கேஜ்ரிவாலின் முக்கிய சகாவாக இருந்தார். இவரும் ஒரு ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, சிசோடியாவின் கைதாலும் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் டெல்லிக்கான 2023-24ஆம் ஆண்டின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வேண்டி உள்ளது. பாதிக்கும் அதிகமானத் துறைகளை கையாண்ட சிசோடியா, மின்சாரம், இலவசப் பேருந்து, மானிய குடிநீர், வேலைவாய்ப்பு, புதிய மருத்துவமனைகள், ஸ்டார்ட்-அப் உள்ளிட்டப் பல முக்கிய அரசு திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார். இதன் இழப்புகளை சமாளிக்க, டெல்லி அமைச்சரவையில் விரைவில் விரிவாக்கமும் திட்டமிடப்படுகிறது. சிசோடியாவை கைது செய்ய சிபிஐ விசாரிக்கும் வழக்கில் அப்ரூவராக மாறிவிட்ட விஜய் அரோரா எனும் குற்றவாளி முக்கியக் காரணம். இவர், ஆம் ஆத்மி ஊடகப் பொறுப்பாளரான விஜய் நாயர் உள்ளிட்ட பல முக்கியவர்களுடன் முதல்வர் கேஜ்ரிவாலை பற்றியும் தகவல்களை தன்னிடமான விசாரணையில் விளக்கியுள்ளார். இதனால், முதல்வர் கேர்ஜிவாலுக்கும் கைது ஆபத்து இருப்பதாகவும் பாஜகவினர் நம்புகின்றனர்.
தேசிய கட்சியாகி விட்ட ஆம் ஆத்மி, இந்த ஆண்டு மேலும் நான்கு சட்டப்பேரவைகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் பிரச்சாரத்தை மார்ச்சில் தொடங்க உள்ள நிலையில், சிசோடியா இன்றி முதல்வர் கேஜ்ரிவால் சமாளிப்பது கடினம் என்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. எனினும், சிசோடியாவின் கைதை அரசியல் ஆயுதமாக்கி, பாஜகவிற்கு எதிராகக் கேஜ்ரிவால் பயன்படுத்துவார் எனவும் ஒரு கருத்து உள்ளது. இதற்கு அவர் சமீபத்தில் சந்தித்த எதிர்கட்சி தலைவர்களான மகராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே, ஆர்ஜேடியின் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வீ பிரசாத் யாதவ், ஜார்கண்டின் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் உதவுவார்கள் என எதிர்ப்பார்ப்பு உள்ளது. தெலங்கானா மற்றும் மேற்குவங்க மாநில முதல்வர்களான சந்திரசேகர ராவும், மம்தா பானர்ஜியும் ஏற்கெனவே கேஜ்ரிவால் தொடர்பில் இருப்பது நினைவுகூரத்தக்கது.