புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது.கடந்த 2021-22-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கை தனியார் நிறுவனங்கள்பயனடையும் வகையில் இருந்ததாகவும், இதற்கு பிரதிபலனாக பலகோடி ரூபாய் லஞ்சப் பணம்கைமாறியதாகவும் குற்றச்சாட்டுஎழுந்தது. அதன்பிறகு, புதியமதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு ரத்து செய்தது.

புதிய மதுபான கொள்கைஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ முன்பு ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை ஏற்று காலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு வந்த மணிஷ் சிசோடியாவிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில், அவரிடமிருந்து கிடைத்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்கிய மணிஷ் சிசோடியாவை பாஜகவின் சிபிஐ கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜனநாயகத் துக்கு இன்று கருப்பு தினமாகும் என்று ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக மணிஷ் சிசோடியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,“நாட்டுக்காக தனது இன்னுயிரை தூக்கில் தியாகம் செய்த பகத்சிங்கின் சீடர் நான். சிறை வாழ்க்கையை கண்டு அஞ்சமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பாகதனது ஆதரவாளர்களிடம் சிசோடியா பேசியதாவது.

நான் 7-8 மாதங்கள் சிறையில் இருக்க நேரிடலாம். என்னை நினைத்து வருத்தப்பட வேண்டாம். மாறாக பெருமைப்படுங்கள். பிரதமர் நரேந்திர மோடி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கண்டு அஞ்சுகிறார்.அதன் காரணமாகவே பொய் வழக்கில் சிக்கவைப்பதற்காக பிரதமர் இத்தனை நாடகங்களை ஆடுகிறார். வீட்டில் எனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் நீங்கள்தான் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். டெல்லிகுழந்தைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிசோடியா உருக்கமுடன் தொண்டர் களிடம் பேசினார்.

இதனிடையே மணிஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட ட்விட்டர்பதிவில்,“கடவுள் உங்களுடன் இருக்கிறார் மணீஷ். லட்சக்கணக்கான குழந்தைகள், அவர்களது பெற்றோரின் ஆசிகள் உங்களுடன் உள்ளது. நீங்கள் நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும் சிறைக்கு செல்லும்போது அது சாபமல்ல, பெருமை. நீங்கள் விரைவில் சிறையில் இருந்து திரும்ப வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். குழந்தைகள், பெற்றோர்கள் என டெல்லியில் உள்ளஅனைவரும் உங்களின் வருகைக்காக காத்திருப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.