போதை மருந்தை உட்கொண்ட கரடியிடம் சிக்கும் மனிதர்கள்! எப்படி இருக்கு 'Cocaine Bear' படம்?

கரடி ஒன்று போதை மருந்துகளை உட்கொண்டால், அடுத்து என்ன என்ன களேபரங்கள் நடக்கும் என்பதுதான் ‘cocaine bear’ படத்தின் ஒன்லைன்.

விமானத்திலிருந்து பல்க்கான போதை மருந்து பெட்டிகளுடன் தப்பிக்க ஒருவர் முயல, கடைசி நிமிடத்தில் அவரால் சரியாக குதிக்க முடியாமல் வேறொரு ரூபத்தில் ஆபத்து வர, மொத்த போதை மருந்தும் காட்டுக்குள் விழுந்துவிடுகிறது. போதைப் பொருளைத் தேட காவல்துறை ஒருபக்கம் விரைகிறது. இன்னொரு பக்கம் இரு வாண்டுகள் ஜாலி டிரிப்பாக காட்டுக்குள் வருகிறார்கள். போதை மருந்தை மீட்டெடுக்க மாஃபியா கும்பலும் உள்ளே நுழைகிறது.

இவர்களுக்கு மத்தியில் ஒரு பெண் வனத்துறை அதிகாரி, அவரின் பாய் ஃபிரெண்டு, ஆம்புலன்ஸ் என பல கதாபாத்திரங்கள் கலவையாய் கதைக்குள் வருகிறார்கள். ஆனால், கதையிலிருக்கும் மிகெப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அந்த போதை மருந்தை ஒரு கரடி சுவைக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான். ‘ஹார்லிக்ஸ்னா அப்படியே சாப்பிடலாமே’ என்பதாக அந்தக் கரடி, போதை மருந்து விழுந்த ஒவ்வொரு இடத்தையும் தேடித் தேடி அலைய, அந்த கரடியின் காலுக்கு அடியில் மனிதர்கள் சிக்கிக்கொள்ள ஒரே கூத்துதான் படம் முழுக்க.

image

கடந்த 1985ல் நிகழ்ந்த உண்மைச் செய்தியை மையமாக வைத்து இந்தக் கதையை இயக்கியிருக்கிறார் நடிகையும் இயக்குநரமான எலிசபெத் பேன்க்ஸ். என்ன இப்படியெல்லாம ஒரு கரடி செய்தது என ஷாக்காக வேண்டாம். உண்மையில் இப்படி போதை மருந்தை உண்ட கரடி, இறந்துவிட்டது. அதில் கற்பனையை எக்கச்சக்கமாய் இணைத்து இந்தப் படத்தை ரகளையாய் இயக்கியிருக்கிறார் பேன்க்ஸ்.

காமெடி ஹாரர் வகைமை சினிமா என்பதால் படத்தில் காமெடிக்கு பஞ்சமேயில்லை. lokesh cinematic universe அதாங்க LCUவில் சேர்க்கும் அளவுக்கும், படத்தில் கரடி போதை பொட்டலங்களை தேடி அலைந்துகொண்டே இருக்கிறது. கரடி யாரைத் துரத்தினாலும் நமக்கு சிரிப்பு வந்துகொண்டே இருக்கிறது. இயற்கை ஆர்வலர்களை நக்கலடிப்பது, விக்கிப்பீடியாவை வம்புக்கு இழுப்பது என எல்லா பக்கமும் ஒரண்டை இழுத்து வைத்திருக்கிறார் எலிசபெத் பேன்க்ஸ்.

image

என்ன… இடைவேளையில் நாம் தக்காளில் சாஸ் வாங்கினால், அதை சாப்பிட முடியாத அளவுக்கு படத்தில் ஆங்காங்கே ரத்தம் தெறிக்கிறது. அதுசரி, கரடி மனிதர்களைக் கடிப்பதை வேறு எப்படித்தான் காட்டுவது என நினைத்துக்கொள்ள வேண்டும் போல. ஆனாலும் இறுதியில் கரடிக்குட்டிகளை வைத்து எமோஷனல் கதையாக லாலாலாலா என விக்ரமன் பாணியில் சுபம் போட்டதை மட்டும் தவிர்த்திருக்கலாம். படத்தின் கலருக்கு சற்றும் ஒட்டாத க்ளைமேக்ஸ் அது.

மற்றபடி செம்ம ஜாலியான சிரித்து அதே சமயம் பீதியாக்க வைக்கும் ஹாரர் சினிமா இந்த ‘கொக்கைன் பீர்’.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.