மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை..!

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் கடந்த 16ம் தேதி வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டன.

இதற்கிடையே மேகாலயாவில் சோகியோங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி  வேட்பாளர் உயிரிழந்ததால், அந்தத் தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டது. இதில், 36 பெண்கள் உள்பட 369 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாகாலாந்தைப் பொறுத்தவரை, அகுலுட்டோ தொகுதியில் பாஜக வேட்பாளர்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால், 59 தொகுதிகளுக்கு 4 பெண்கள் உள்பட 183 பேர் களத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் இரு மாநிலங்களிலும் பிரசாரம் ஓய்ந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வந்தனர். இந்நிலையில் மாலை 4 மணியுடன்  வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இரு மாநிலங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேகாலயாவில் 3 மணி நிலவரப்படி 63.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகாலாந்தில் 72.99% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேகாலயாவில் 119 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வங்கதேசம் உடனான மேகாலயாவின் சர்வதேச எல்லையை மார்ச் 2ம் தேதி வரை சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள், திரிபுராவில் பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். திரிபுரா தவிர மற்ற இரு மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி நடைபெற்றது. இந்த தேர்தல் மூலம் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது மார்ச் 2ல் தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.