ராணுவத்தினருக்கு பென்ஷன் நிலுவை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்| Supreme Court strongly condemns pension arrears for soldiers

புதுடில்லி : ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகை தொடர்பான வழக்கில், ராணுவ அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2022ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி வழங்கிய தீர்ப்பில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிலுவைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆனால், நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஜன., 9ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராணுவ அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வரும் மார்ச் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கினர்.

இந்நிலையில், ஜன., 20ல் ராணுவத் துறை செயலர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கான நிலுவைத் தொகை நான்கு தவணைகளாக வழங்கப்படும்’ என, கூறியிருந்தார்.

ராணுவ செயலரின் இந்த அறிவிப்பை எதிர்த்து, ஓய்வூதியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜெ.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஓய்வூதியம் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. நீதிமன்ற உத்தரவையும் மீறி நான்கு தவணைகளாக வழங்குவோம் என அறிவிப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

ராணுவ செயலர் தன் நிலைப்பாட்டை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே வழங்கிய அவகாசப்படி மார்ச் 15ம் தேதிக்குள் ராணுவத்தினருக்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். இல்லையெனில் ராணுவ அமைச்சகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.