லைட்மேன் குடும்பத்திற்கு நிதி திரட்டும் ஏ.ஆர்.ரஹ்மான்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு இயற்கை பேரிடர் மற்றும் பொதுநலத்திற்காக இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தி கொடுப்பார். அந்த வகையில் சினிமாவின் கடைகோடி தொழிலாளர்களான லைன்மேன்கள் குடும்ப நலத்திற்காக இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட இருக்கிறார்.

இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தயாரிப்பாளர்களிடம் கெஞ்சியும், கொஞ்சியும் சம்பள உயர்வு வாங்கி வருகிறோம். என்றாலும் அடிப்படை தொழிலாளருக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை எட்ட 100 வருடங்கள் ஆகிறது. படப்பிடிப்பு விபத்துகளில் ஏராளமான தொழிலாளர்கள் மரணம் அடைகிறார்கள். பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு என்றால் ஏதாவது ஒரு உதவி கிடைத்து விடுகிறது. சிறிய படங்களின் படப்பிடிப்பில் அது கிடைப்பதில்லை.

விபத்தில் ஒரு தொழிலாளி இறந்துவிட்டால் அந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு எந்த பணி பலனும் கிடைப்பதில்லை. இதை உணர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் முதல்கட்டமாக லைட்மேன்களின் குடும்ப நிதி ஒன்றை திரட்ட அவராகவே முன்வந்தார். அதன்படி வருகிற மார்ச் 19ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி லைட்மேன் குடும்பத்திற்கு பயன்படுத்தப்படும். லைட்மேன்கள் விபத்தில் இறந்தால் அந்த குடும்பத்திற்கு இந்த நிதியின் மூலம் உதவி செய்யப்படும். மற்ற தொழிலாளர்களுக்கும் இதுபோன்ற உதவிகளை மேலும் செய்ய ரஹ்மான் முன்வந்திருக்கிறார்.

ரஹ்மானை போன்று உதவும் மனம் கொண்ட நடிகர், நடிகைகள் தங்கள் வருமானத்தில் இருந்து ஒரு சதவிகிதத்தை கொடுத்தாலே தொழிலாளர்கள் பிரச்சினை தீர்ந்துவிடும், மத்திய மாநில அரசுகளும் தொழிலாளர்களுக்கு நேரடியாக கிடைக்கும் விதத்தில் உதவிகள் செய்ய வேண்டும். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.