பெலகவி: விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 13-வது தவணை நிதியாக ரூ.16 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக வழங்கும் விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் 11-வது தவணை கடந்த ஆண்டு மே மாதமும், 12-வது தவணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் விடுவிக்கப்பட்டது. 13-வது தவணை நிதி இன்று விடுவிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெலகவியில் ரூ.190 கோடியில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்தபடியே விவசாயிகளுக்கான நிதியை விடுவித்தார்.
இதன்மூலம் ரூ. 6 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிதி சென்று சேர்ந்துள்ளது. இவர்களில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பெண் விவசாயிகள். இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.2.25 லட்சம் கோடி நிதி சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதில், பெண் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.53,600 கோடி செலுத்தப்பட்டுள்ளது.