“20 நாள்கள்தான் டைம்; அதற்குள் நிறுத்தவில்லை என்றால்..!" – தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில், கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து, பா.ஜ.க சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சூரியன் அஸ்தமனம் ஆகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இங்கு நிலநடுக்கம் வராது என்று இல்லை… எங்கு வேண்டுமானாலும் வரலாம். கடந்த 70 ஆண்டுகளில், இந்தப் பகுதிகளிலுள்ள குவாரிகளில், 75 அடி வரை தோண்டப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், இந்தப் பகுதியில் இருக்கும் குவாரிகளில், 220 அடிவரை தோண்டப்பட்டு கனிம வளங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் விளைவு தற்போது தெரியாது, 20 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தெரியும்.

தமிழக அரசின் ஆண்டு வருமானம் 1,80,000 கோடி ரூபாய். ஆனால் கனிம வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் 900 கோடிதான் என்று கூறியது தமிழக அரசு. சில தனியார் நிறுவனங்கள், அரசால் வழங்கப்பட வேண்டிய ட்ரிப் ஷீட்டை தானாகவே அச்சடித்துக் கொள்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து மட்டும், 12,000 யூனிட் மணல் சட்டவிரோதமாக கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது.

கேரள அரசு உஷாராக இருக்கிறது… அங்கு மணல் எடுத்தால் குண்டாஸ் சட்டம் பாயும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று துணை பிரதமர் ஆகிவிடலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காகவே, கனிம வளங்களை கேரளாவுக்கு விட்டுக் கொடுக்கிறார் ஸ்டாலின். கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால், ஒவ்வொரு செக்போஸ்டிலும் 100 பா.ஜ.க தொண்டர்கள் ஷிப்ஃட் முறையில் அமர்வோம்.

என்னுடைய ஷிப்ஃட் வரும்போது நானும் அமர்வேன். கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த 20 நாள்கள்தான் டைம். தடுத்து நிறுத்தவில்லை என்றால், 21-வது நாள் முதல் லாரியை நானே தடுத்து நிறுத்துவேன்” என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஈரோட்டில் நடந்து சென்றாலே, பாக்கெட்டில் பணத்தை வைத்து அனுப்புகின்றனர் தி.மு.க-வினர். கனிம வளக் கொள்ளை மற்றும் மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மக்களை விலைக்கு வாங்குகின்றனர். நாம் ஆடுகளுக்கு பட்டி வைத்துப் பார்த்திருப்போம். முதன் முறையாக மனிதர்களுக்கான பட்டியை அறிமுகப்படுத்தியிருக்கிறது தி.மு.க.

நம்மைவிட பின்தங்கிய நாடான ஆப்பிரிக்காவில்கூட மனிதர்களுக்கு பட்டிகள் அமைத்ததில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில், அனைத்து பூத்களிலும் பட்டி… வருபவர்களுக்கு காலையில் பணம், மதியம் உணவு, மாலையிலும் பணம் வழங்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் என்று பரப்புரையின் கடைசி நாளில் அறிவிக்கிறார். காஸ் மானியம், மாதம் ஆயிரம் ரூபாய் என 22 மாதங்களுக்கும் சேர்த்து கணக்கு போட்டால்… 24,200 ரூபாய் வருகிறது. அந்தத் தொகையை பெண்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.