25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: அதிமுக வேட்பாளர் தென்னரசு பேட்டி

சென்னை: தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நான் 100 சதவீதம் வெற்றி பெறுவேன். அதுவும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம், விநாயகர் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் விறுவிறுப்பாக வாக்கு பதிவு செய்து வருகின்றனர். தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என 100 சதவீத நம்பிக்கை உள்ளது. 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நன்றாக செய்துள்ளது. வாக்காளர்களுக்கு மை வைப்பதில் ஒரு சில இடங்களில் தவறு நடக்கலாம். அது குறித்து கட்சி தலைமையில் இருந்து அறிக்கை வரும்.

ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் இருக்கும். திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும் சண்டை சச்சரவு வராது. அநாகரிகமாக ஒருவரை ஒருவர் திட்டி பேசிக் கொள்ள மாட்டார்கள். அடிமட்ட தொண்டர்களுக்குள் சண்டை வருமே தவிர தலைவர்களுக்குள் சண்டை வராது.

எனவே தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. இன்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக எனக்கு தகவல் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகமாக இருப்பதால் வாக்கு பதிவு தாமதமாகிறது. அதை விரைவுபடுத்துமாறு கூறியுள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.