ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தொகுதிக்கு உட்பட்ட பெரியண்ணா வீதியில், திமுக-அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்து பொருட்களை வழங்குவதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றம் சாட்டிய நிலையில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான தகவலின்படி, ஈரோடு பெரியண்ணா வீதி பகுதியில் வாக்குச்சாவடி மையத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு வீட்டில், வாக்காளர்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் விசாரணை நடத்தியதில், அங்கு திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்களை வழங்கதாக தெரிந்தது.
இதனை அடுத்து காவல் துறையினரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று அதிமுகவினர், வாக்காளர்கள் மத்தியில் இருந்த திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கு அடைக்கப்பட்டிருந்த வாக்காளர்களை வெளியேற்றினர்.
மேலும், பெரியண்ணா வீதி பகுதியில் இதுபோல் வாக்காளர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.