El Salvador: 40,000 கைதிகளை அடைக்கும் மெகா சிறைச்சாலை திறப்பு… பின்னணி என்ன?

எல் சால்வடார் நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், சுமார் 40,000 கைதிகளை சிறைப்பிடித்து வைக்கும் வகையில், பிரமாண்டமான சிறை கட்டப்பட்டிருக்கிறது. இதில் முதற்கட்டமாக 2,000 கைதிகள், புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். தற்போது இது மத்திய அமெரிக்காவின் மிகப்பெரிய சிறைச்சாலையாக அமைந்திருக்கிறது.

மத்திய அமெரிக்க நாடுகளில், மக்கள்தொகையின்படி,  எல் சால்வடார் நாடு, இரண்டாவது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. இதன் தலைநகரம் சான் சால்வடார். இதன் மொத்த மக்கள்தொகை கிட்டத்தட்ட 6.9 மில்லியன்.

கைதிகள்

மேலும் உலக அளவில் குற்றச் சம்பவங்கள் அதிகம்  நடைபெறும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் எல் சால்வடார் நாடும் இடம்பிடித்திருக்கிறது. இங்கு 67.79 சதவிகிதம் குற்றங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இது போன்ற நாடுகளில் குற்றங்கள் நடப்பதற்கு வறுமை, வேலைவாய்ப்பின்மை, குறைந்த ஊதியம், நீதிமன்றம், காவல்துறையில் பணியாளர்களின் பற்றாக்குறை, கடுமையான தண்டனைகள் இல்லாமை போன்றவை காரணமாகின்றன. MS-13, பேராியோ 18 என்ற இரண்டு பெரிய ரெளடிக் கும்பல் திருட்டு, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் போன்ற பெரும்பாலான சமூகக் குற்றங்கள், வன்முறைக்குக் காரணமாக இருக்கின்றன.

கடந்த ஆண்டு, மார்ச் மாதத்தில் மட்டும் ஒரே நாளில் 62 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க நினைத்த அந்த நாட்டு அதிபர், நயிப் புக்கேலேவின் (Nayib Bukele) அதிரடியான உத்தரவின்பேரில், சந்தேகத்துக்குரிய நபர்கள் எனக் கருதப்பட்டவர்கள், எந்தவிதமான கைது  ஆணையும், விசாரணையுமின்றி கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், அந்த நாட்டில் கிட்டத்தட்ட 63 ஆயிரம் ரெளடிகள் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்த கைதிகளில், அதிக குற்றம் செய்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் முதற்கட்டமாக அந்த பிரமாண்ட சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். அவர்களை மாற்றுவதற்காக, தலையை மொட்டை அடித்து, கைகள் மற்றும் கால்களைச் சேர்த்துக் கட்டிய நிலையில், கால் சட்டை மட்டும் அணிந்து அவர்களை வரிசையாக அமரவைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

“ இது அவர்களுக்கு புதிய வீடு. இன்னும் பல்லாண்டு காலத்துக்கு அவர்கள் இங்குதான் வாழப் போகிறார்கள்.  இனி அவர்களால் மக்களுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது” என அந்நாட்டு அதிபர் தன் ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

கைதிகள்

இந்த பிரமாண்டச் சிறை தலைநகர் சான் சால்வடாரிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டெக்காலுக்காவில் அமைந்திருக்கிறது. எட்டு கட்டடங்கள்கொண்ட இதில் ஒவ்வொரு கட்டடத்திலும் 100 சதுர மீட்டர் அளவுள்ள 32 செல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்படுவார்கள். இதில் ஒரு செல்லுக்கு இரண்டே இரண்டு கழிவறைகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் சில மனித உரிமை அமைப்புகள் இதில் பல அப்பாவி மக்களும் கைதுசெய்யப்பட்டு, கொடூரமாகச் சித்ரவதை செய்யப்படுவதாகக் கூறுகின்றன. இருப்பினும், அதிபரின் இந்த அதிரடி நடவடிக்கை, எல் சால்வடார் நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.