“அரசு அமைப்புகளை கூட்டணி கட்சி போல ஆட்டுவிக்கிறது பாஜக" – சிசோடியா கைதுக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!

டெல்லியில் மதுபான கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக, ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் மீது பல மாதங்களாக பா.ஜ.க குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்த நீலையில், கடந்த வாரம் சி.பி.ஐ அவரைக் கைதுசெய்தது. முன்னதாக மணீஷ் சிசோடியாவிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ, அவரின் பதில்கள் திருப்திகரமானதாக இல்லை எனக் கூறி வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தது.

சிசோடியா

இதன் காரணமாக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை, பல்வேறு தரப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. இந்த நிலையில், திமுக எம்.பி டி.ஆர்.பாலுவும், மனிஷ் சிசோடியாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகும்போதே தன்னைக் கைதுசெய்து விடுவார்கள் என மணீஷ் சிசோடியா சொன்னதைப் போலவே, ஒன்றிய அரசின் சி.பி.ஐ அவரைத் தற்போது கைதுசெய்து, 5 நாள் கஸ்டடியும் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மீது, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவி விடும் போக்கு பா.ஜ.க-வுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகளையும் தன் கூட்டணிக் கட்சிகள் போல் ஆட்டுவித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் போக்கு கவலைக்குரியது. இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, அப்பட்டமான சட்டவிரோதம்.

டி.ஆர்.பாலு

புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம் இந்த ஆட்சியில் காற்றில் பறந்திருப்பது போல் வேறு எந்த ஆட்சியிலும் நடைபெற்றதில்லை என்பதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகக் குறி வைத்து கைதுசெய்யப்படுவதில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்றது முதலே, தங்கள் கொள்கைக்கு எதிராகச் சிந்திக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரையும் குறிவைத்து அச்சுறுத்தும் போக்கு தொடங்கிவிட்டது. பா.ஜ.க-வின் இத்தகைய அதிகார அச்சுறுத்தலுக்கான ஆக்டோபஸ் கரங்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளை நோக்கி மிக வேகமாக, அராஜகமாக நீண்டு வருகிறது.

`சி.பி.ஐ கைது செய்ய விரும்பவில்லை. ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’ என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டினையும் எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது. ஒன்றிய பா.ஜ.க அரசின் மீது அடுக்கடுக்காக எழுந்து வரும் இமாலயக் குற்றச்சாட்டுகளிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே, இந்தக் கைது நடவடிக்கையை ஆளும் தரப்பு எடுத்து வருகிறது.

கெஜ்ரிவாலுடன் சிசோடியா

அதிகாரத்தில் இருக்கும்போது அதன் அமைப்புகளை, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தியவர்கள், பின்னாளில் வரலாற்றின் குப்பைத் தொட்டிகளில் தூக்கி வீசப்பட்ட உதாரணங்கள் நிறையவே உண்டு என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசில், சி.பி.ஐ அமைப்பை ஏவி விடுவோர் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எத்தனை ஊடகங்களை வளைத்து உண்மைகளை மறைக்கப் பார்த்தாலும், மக்கள் மன்றத்தில் அது அம்பலமாகிவிடும்.

பாஜக – அமித் ஷா, மோடி

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கி, ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் தனது மூர்க்கப் போக்கை ஒன்றிய பா.ஜ.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், இவற்றைக் கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள், வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள். பாடம் புகட்டும் நீதிபதிகளாக மாறி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வட்டியும் முதலுமாகத் திருப்பி வழங்குவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.