சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 70 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என 5 இடங்களில் புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. வனத்துறை தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தற்போது 264 புலிகள் உள்ளன. தேசிய அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் இது 10% ஆகும்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 70 புலிகள் உயிரிழந்துள்ளன. சரணாலயத்தில் 44 புலிகளும் மற்றவை வெளியிடங்களில் இறந்ததாக கூறப்படுகிறது. நாட்டிலேயே புலிகள் இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) தரவுகள் தெரிவிக்கின்றன. இது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலிகளை பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.