விழுப்புரம்: ஆரோவில் சர்வதேச நகரம் தொடங்கப்பட்ட தினமான இன்று அதிகாலை ஆரோவில்வாசிகள், வெளிநாட்டினர் அங்குள்ள திறந்தவெளி கலையரங்கில் நெருப்புமூட்டி தியானத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான (விழுப்புரம் மாவட்டம்) வானூர் அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் மகான் அரவிந்தரின் சீடரான ஸ்ரீஅன்னையின் கனவு நகரமாக 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ம்தேதி தொடங்கப்பட்டது.
எந்த ஒரு நாட்டினருக்கும் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள முடியாத ஒரு பொதுஇடமாக அனைத்து மதத்தினரும் கொண்டாடும் வகையில் அமைய வேண்டும் என்று அவர் நினைத்ததன்பேரில் இப்பகுதியில் மாத்ரி மந்திர் என்று அழைக்கப்படும் அன்னையின் ஆலயமான தங்க உருளை வடிவில் தியான மண்டபமும், ஆம்பி தியேட்டர் என்றழைக்கப்படும் திறந்தவெளி கலையரங்கமும் 121 நாடுகளிலில் இருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களில் இருந்தும் மண் எடுத்து வரப்பட்டு அமைக்கப்பட்டது.
ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் அன்னையின் பிறந்தநாளான பிப்ரவரி 21ம்தேதி துவங்கியது. இதற்காக ஆரோவில்வாசிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். 8 நாள் நிகழ்ச்சியின் நிறைவுநாளான இன்று (28ந்தேதி) அதிகாலை 4.30 மணி அளவில் மாத்ரி மந்திர் அருகே உள்ள ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்தவெளி கலையரங்கில் போன் பயர் எனப்படும் நெருப்பு மூட்டி தியானத்தில் ஈடுபட்டனர். இதில் ஆரோவில் வாசிகள் மற்றும் வெளிநாட்டினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி அப்பகுதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுற காட்சியளித்தது.