இந்தியாவின் ஒவ்வொரு நகரிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயரில் தெரு: சத்குரு வலியுறுத்தல்

கோவை: நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்கமோ இடம்பெற செய்ய வேண்டும் என ஈஷா நிறுவனர் சத்குரு பேசினார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை உலகின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கத்தில் புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து ‘உலக காஷ்மீரி பண்டிட் புலம் பெயர்ந்தோர் கூட்டமைப்பை’ தொடங்கி உள்ளனர்.

இந்த அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் ஈஷா நிறுவனர் சத்குரு பேசும்போது, ‘‘உலகளவில் காஷ்மீரி பண்டிட்கள் மீதான கருத்துருவாக்கத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். குறைந்த பட்சம் இந்தியாவில் வாழும் அனைத்து இந்தியர்களும் நம்முடைய காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தனி நபராகவும் குடும்பமாகவும் நீங்கள் சந்தித்த வலிகளை 10 முதல் 20 நிமிட குறும்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். இதற்கு திரையரங்குகள் தேவையில்லை. நம் அனைவரிடமும் மொபைல் போன்களும், கம்ப்யூட்டர்களும் உள்ளன. இந்த தொழில் நுட்பங்களே போதுமானது.

காஷ்மீரின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மிக அம்சங்களை பாதுகாக்க ஆதரவு அளிக்க நான் தயாராக உள்ளேன். நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்கமோ, வட்டமோ இடம்பெற செய்வதற்கு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.

இந்தியாவின் தென் பகுதிகளில் நீங்கள் ‘காஷ்மீர் தினம்’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். அந்நிகழ்ச்சி மூலம் உங்களுடைய கலை, இலக்கியம், இசை என அனைத்தையும் பிற மக்கள் அறிந்து கொள்ளட்டும்.

உங்களுடைய கதைகள் வலிகளுடன் மட்டும் நின்று விடாமல், காஷ்மீர் கலாச்சாரத்தின் அழகையும், உங்களுக்குள் இருக்கும் துடிப்பான அதிர்வுகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும்” என்றார். இது தொடர்பாக சத்குரு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காஷ்மீர் கருத்துருவாக்கத்தை மீண்டும் பேச வேண்டிய நேரமிது.

காஷ்மீர் இளைஞர்கள் இந்தப் பொறுப்பை கையிலெடுக்க வேண்டும். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டும். காஷ்மீரின் எதிர்காலம் மற்றும் கருத்துருவாக்கத்தை மாற்றும் பணியில் இளைஞர்கள் சக்தி வாய்ந்த மற்றும் பொறுப்பு மிக்கவர்களாக திகழ வேண்டும்,” என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.