`சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும்’ என்று சொல்வார்கள். ஆனால், தனக்கு புற்றுநோயினால் இறப்பு நிகழப் போகிறது என்று அறிந்த பெண் ஒருவர், பார்ட்டி நடத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தில் வசிக்கும் லிண்டா வில்லியம்ஸுக்கு 76 வயது. ஒரு வருடத்திற்கு முன்பு இவர் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். வாழ்வின் இறுதி நாள்களில் இருக்கும் லிண்டா, மற்றவர்களைப் போல ஓரிடத்தில் ஒடுங்கிவிடாமல், தன்னுடைய ஆசைகளைப் பட்டியலிடச் செய்திருக்கிறார்.
ஸ்பிட்ஃபயர் (spitfire) விமானத்தில் பயணம்:
லிண்டாவுக்கு சிறு வயது முதலே ஓர் இருக்கை மட்டுமே கொண்ட ஸ்பிட்ஃபயர் போர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என ஆசை. ஏனெனில் லிண்டாவின் பெற்றோர் விமானப்படையில் வேலை செய்தவர்கள். அதனால் இந்த விமானத்தைப் பார்க்கும்போது எல்லாம், அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. அதில் அவர் சமீபத்தில் பயணித்து இருக்கிறார்.
இரவு நேர பார்ட்டி:
அடுத்து, 1940ஸ் `பிரிட்டன் போர்’ என்ற தலைப்பில் தீம் பார்ட்டியை, அக்டோபர் மாதத்தில் தன் நண்பர்களுடன் கொண்டாடினார். ஸ்பிட்ஃபயர் பைலட் உடையில், பின்புறமாக பாராசூட் அணிந்திருந்தார். நிகழ்ச்சிக்கு முன்பே சென்றவர், இரவு முழுதும் நடனமாடி மகிழ்ந்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்த தன் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
தன்னுடைய ஆசைகள் குறித்து லிண்டா கூறுகையில், `நான் ஒருபோதும் நல்ல இறுதிச் சடங்குகளுக்குச் சென்றதில்லை, அவை பரிதாபகரமான விஷயங்கள், அதனால் நான் என் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இறக்கப்போகும் நாள்களை எண்ணி, வாழும் நாள்களை மறந்து விடாமல், நோய்க்கான சிகிச்சைகளை வீட்டிலேயே எடுத்துக் கொண்டு, மிச்ச வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பித்து இருக்கிறார்.