பியாங்யாங்: வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார்.
வட கொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரிவதில்லை.
இந்நிலையில், வட கொரியாவில் உணவுப் பஞ்சம் நிலவுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் கசிந்தன. இதையும் வட கொரியா மறைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட கொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்ட தகவலை அதிபர் கிம் வெளிப்படையாக கடந்த 2021-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டார். தற்போது வட கொரியாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது.
உணவு தட்டுப்பாட்டிலிருந்து மீளவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும் தற்சார்பு பொருளாதாரம் அவசியம் என்றும், வெளிநாடுகளிலிருந்து உணவுகளை இறக்குமதி செய்வது விஷ மிட்டாய்களுக்கு சமம் என்றும் கிம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், முக்கியச் சந்திப்பை அதிகாரிகளுடன் கிம் நடத்தியிருக்கிறார். அதில், தானிய உற்பத்தி இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தையும், விவசாய உற்பத்தி செயல்முறையை மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் கிம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தச் சந்திப்பில் கிம், “ நாம் விவசாய உற்பத்தி சார்ந்து தீவிர மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஒன்றுபட்ட தலைமை அமைப்பு இருக்கும் வரை இங்கு எதுவும் சாத்தியமில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த மாதம் அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் சிந்தனை அமைப்பு (think tank) வெளியிட்ட அறிக்கையில், “வட கொரியாவின் 2020-21 விவசாய அறுவடையானது, குறைந்தபட்சம் கூட தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியிருக்கலாம். அதனால்தான் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.
வட கொரியா உணவு பஞ்சத்துக்கு உள்ளாவது இது முதல்முறை அல்ல. 1990களில் வட கொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பஞ்சத்தில் 2,40,000 பேர் வரை உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.