ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

டெல்லி: ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என  உச்சநீதிமன்றம் மீண்டும் கூறியுள்ளது.

பஞ்சாப் சட்டமன்றத்தை கூட்ட மறுப்பதாக அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு ஆளுநரின் செயல்பாட்டுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுப்படி சட்டப்பேரவையை கூட வேண்டியது ஆளுநரின் கடமை என உச்சநீதிமன்றம் கூறியது.

ஆளுநர் கேட்ட சில விவரங்களை பஞ்சாப் முதலமைச்சர் தரவில்லை என ஒன்றிய அரசின் வழக்கறிஞர் துஷார் மோத்தா வாதிட்டார்.

ஆளுநர் கேட்கும் விவரங்களை தரவேண்டியது முதலமைச்சரின் கடமை, அரசியலமைப்பு ரீதியான பதவியில் உள்ள முதல்வர், கடமையை செய்யவில்லை என்று கூறி ஆளுநர் கடமையை தட்டிக்கழிக்க முடியாது. இருப்பினும், முதலமைச்சர் விவரங்களை தரவில்லை என்பதை காரணம் காட்டி அமைச்சரவை முடிவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அரசியல் சட்டரீதியான பதவியில் இருக்கும் பண்பட்ட தலைவர்களால் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படாது என நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும், அவற்றை பண்பட்ட முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.