ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில், வங்கி காவலராக பணியாற்றிய பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவரை கொன்ற பயங்கரவாதி உட்பட இருவரை, பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் இருக்கும் அச்சன் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இவர், வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர், கடந்த ௨௬ம் தேதி தன் வீட்டுக்கு அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றபோது பயங்கரவாதியால் சுடப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
அவரது உடல், நேற்று முன்தினம் புல்வாமாவில் உள்ள அவரது சொந்தக் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது பற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்கம்போரா கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஆயுதங்களுடன் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர், அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் தப்பித்து அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்துகொண்டார்.
அந்த வீட்டை சுற்றி வளைத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், அவரும் கொல்லப்பட்டார்.
பயங்கரவாதிகள் சுட்டதில், பாதுகாப்புபடை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர், சஞ்சய் சர்மாவை கொன்ற ஆகிப் முஸ்தாக் பட் என அடையாளம் காணப்பட்டது.
மற்றொருவர் புல்வாமாவைச் சேர்ந்த அஜாஸ் அஹமது பட் எனத் தெரிய வந்தது. இவர்கள் இருவரும், ‘த ரெசிஸ்டென்ட் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்கொலை
ஜம்மு – காஷ்மீரில், ரஜவுரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா பகுதியில் டெய்ன் பிரிட்ஜ் ராணுவ முகாம் உள்ளது. இங்கு, காவல் பணியில் ஈடுபட்டிருந்த கேரளாவைச் சேர்ந்த வீரர் ஒருவர், நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் வழக்குப் பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வீரர் குறித்து வேறெந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்