மதுரை: மதுரை மாநகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள சாலைகளில் இன்னும் தெருவிளக்குகள் எரியாததால் நகரப்பகுதிகள் மக்கள் நடமாட முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது.
தமிழ்நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை தற்போது போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் சிக்கித் தவிக்கிறது. 2011ல் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 கிராமப் பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 100ஆக உயர்த்தப்பட்டது. இதனால் 55 சதுர கி.மீட்டராக இருந்த மாநகராட்சியின் பரப்பளவு, இப்போது 142 ச.கி.மீராக விரிந்துள்ளது. மாநகராட்சியில் மொத்தம் 265 கி.மீ., பஸ் வழித்தடம் சாலைகள் உள்பட மொத்தம் 1,545 கி.மீ., தொலைவிற்குள் சாலைகள் உள்ளன.
இதில் மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமாக 74 கி.மீ., தொலைவிற்கும், தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமாக 13 கி.மீ., தொலைவிற்கும் சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் மாநகராட்சியும், மின்வாரியமும் இணைந்து மின்விளக்கு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 80 சதவீதத்திற்கும் மேலாக தெருவிளக்குள், சாலை விளக்குகள் எரியவில்லை. தெருவிளக்குகள் பராமரிப்பை டெண்டர் எடுத்த நிறுவனத்தின் டெண்டர் காலம் முடிந்ததால் அவர்கள் பராமரிக்க முன்வரவில்லை.
அதன்பிறகு பொதுமக்கள், கவுன்சிலர்கள் நெருக்கடியால் மாநகராட்சி புதிய நிறுவனத்திற்கு தெருவிளக்குகள், சாலை விளக்குகள் பராமரிப்பு டெண்டரை விட்டது. தற்போது அவர்கள் மாநகராட்சியில் பழுதடைந்த சாலை விளக்குகள், தெருவிளக்குகளை பழுதுப்பார்த்தனர். எரியாத விளக்குகளை மாற்றி புதிய விளக்குகளை பொருத்தினர்.இந்நிலையில் இன்னும் முக்கியமான நகர சாலைகள், தெருக்களில் தெருவிளக்குகள், சாலை விளக்குகள் எரியவில்லை. ஏராளமான நகரச்சாலைகள், தெருக்கள் கும் இருட்டில் மூழ்கி கிடக்கிறது.
மக்களால் நகரச்சாலைகளில் நடமாட முடியவில்லை. வாகன ஓட்டிகள், சாலைகளில் தெருவிளக்குகள் இல்லாததால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. ஏற்கெணவே சாலைகள் மற்றும் தெருக்களில் பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.எனவே மாநகராட்சி நிர்வாகம், சாலை விளக்குகள், தெரு விளக்குகளை எரிய வைத்து மதுரை மாநகருக்கு வெளிச்சம் கொடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.