குலசேகரம்: கோதையார் வனப்பகுதியில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ விவசாய நிலங்களில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்துவிட்ட நிலையில் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குமரி மாவட்டத்தையொட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளதால் இங்கு அடர்ந்த காடுகள் காணப்படுகிறது. இந்த காடுகளில் அரியவகை மூலிகைகள், மரங்கள் மற்றும் வன விலங்குகள் நிறைந்து பல்லுயிர் சரணாலயமாக உள்ளது. வனப்பகுதிகளை ஒட்டி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகள் உள்ளன. பருவ மழை காலங்களில் மலைகள், காடுகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வழிந்தோடி காடு முழுவதும் செல்வதால் மரங்கள் மற்றும் செடிகள் புத்துயிர் பெற்று பச்சை பசேலென கண்களுக்கு விருந்தளிக்கும்.
ஆனால் இதற்கு எதிர்மாறாக கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வறட்சி ஏற்பட்டு மரங்களில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடுகின்றன. மேலும் அவ்வப்போது மலைப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு அரியவகை மரங்களை அழித்துவிடுகின்றன. அந்த வகையில் தற்போது மழைக்காலம் முடிந்து வெயில் சுட்டெரிக்கிறது. மழை இல்லாததால் நீரூற்றுகள், நீரோடைகள் வறண்டு போய் தரைப்புற்களை கூட தளிர்க்க விடுவதில்லை. இந்த நிலையில் கோதையாறு அருகே உள்ள குற்றியாறு, ராக் பகுதியில் கடந்த 4 நாட்களாக கட்டுத்தீ பற்றி எரிந்து காடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரியவகை மரங்கள், மூலிகைகள் தீயில் பொசுங்கிவிட்டன.
மேலும் பறவைகள், கரடி, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. இன்று 5வது நாளாக காட்டு தீ வேகமாக பரவி வருவதால் பேச்சிப்பாறை சுற்றூவட்டர மலைப்பகுதிக்கு தீ பரவும் சூழல் உள்ளது. மேலும் அங்குள்ள விவசாய நிலங்களுக்கும் பரவி பெரும் சேதம் விளைவிக்க வாய்ப்புள்ளது. எனவே வனத்துறையினர் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கோடையில் இதுபோல் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்.
அவை மலைப்பகுதியையொட்டிய விவசாய நிலங்களுக்கும் பரவி பெரும் சேதம் விளைவிக்கின்றன. ஆனால் காட்டுத்தீயை முன்கூட்டியே கட்டுப்படுத்த வனத்துறையினர் திட்டம் எதுவும் வகுப்பதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் காட்டுத்தியினால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளைபோன்று வரும்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்டுத்தீயை கட்டுப்படுத்தினால் மட்டுமே, அரியவகை உயிரினங்களை காப்பாற்ற முடியும் என்றனர்.