கோவை காளப்பட்டி அருகே சுகுணா ஆடிட்டோரியத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழக செயற்குழு கூட்டம் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்றது. இதில்
திமுக
மாவட்ட செயலாளர்கள், 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை கோவை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாட வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
இதற்கு கழக நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர்
மு.க.ஸ்டாலின்
பிறந்த நாளை ஒட்டி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
70 ஜோடிகளுக்கு திருமணம்
ரத்ததான முகாம்கள் நடைபெறும். கோவை மாவட்டத்தில் அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
தலைமையில் கொடிசியா மைதானத்தில் வரும் 5ஆம் தேதி 70 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் 11.30 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் அரசு விழா நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மாலை 4.30 மணியளவில் கொடிசியா சாலையில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் சார்பில் மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்.
பொற்கிழிகள் வழங்குதல்
மாலை 5 மணிக்கு கோவை புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கோவை மாவட்ட மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் பேருரை ஆற்றுவார் எனத் தெரிவித்தார். மேலும் பேசுகையில், கோடை காலத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு என்ன தேவையோ, அதை கணக்கிட்டு டெண்டர் போட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மின் இணைப்பு – ஆதார் எண்
மின்சாரத் துறை சார்பில் அடுத்த வாரம் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு 4,200 மெகாவாட் கூடுதலாக தேவைப்படுவதாக குறிப்பிட்டார். மின் இணைப்பு – ஆதார் எண் இணைப்பு குறித்து பேசுகையில், 2 கோடியே 67 லட்சம் பேர் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நிலையில் இருந்தனர். இன்று வரை 2 கோடி 66 லட்சம் பேர் இணைத்து விட்டனர்.
மத்திய அரசு நிதி
99.5 சதவீதம் ஆதார் இணைப்பு நடைபெற்றுள்ளது. மீதம் உள்ளவர்களும் இணைக்கப்படுவார்கள் என்றார். மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் அரசியல் உள்ளது என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியது பற்றிய கேள்விக்கு, மதுரை எம்.பி சொல்லும் கருத்தை முதல்வரின் ஆலோசனைப்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை முன்வைத்துள்ளனர். ரயில்வே திட்டத்திற்கும் உரிய நிதி ஒதுக்கவில்லை. வரக்கூடிய காலம் நல்ல தீர்வை தரும் என்று நம்புவதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.