புதுடில்லி சமூக வலைதளங்கள் குறித்த புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் புதிய வசதி அமலுக்கு வந்தது. குறைதீர்வு தீர்ப்பாய குழுக்கள் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக தனி இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, சமூக வலைதளங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொய்யான செய்தி, போலி செய்தி, அவதுாறு செய்தி பதிவிடுவதை கட்டுப்படுத்துவது, அவற்றை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை சமூக வலைதளங்கள் எடுக்க வேண்டும்.
பிரச்னை
மேலும், பயனாளர்கள் புகார் அளிக்கும் வசதியும், இது குறித்து விசாரிக்க குறைதீர்வு அதிகாரிகளையும் சமூக வலைதளங்கள் நியமிக்க வேண்டும்.
இந்நிலையில், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக பயனாளர்கள் பதிவு நீக்கப்படுவது, கணக்கு முடக்கப்படுவது போன்றவை தொடர்பாக பயனாளர்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் இடையே பிரச்னை உள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இதை தடுக்கும் வகையில், சமூக வலைதளங்களுக்கான குறைதீர்வு தீர்ப்பாய குழுக்கள் நடைமுறையை செயல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, தலா மூன்று உறுப்பினர்கள் உள்ள, மூன்று தீர்ப்பாய குழுக்கள் செயல்பாடு நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி சமூக வலைதளங்களின் குறைதீர்வு அதிகாரிகள் அளித்துள்ள பதிலில் திருப்தி அடையாத பயனாளர்கள், இந்த தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
இதற்காக, https://gac.gov.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளர்கள் தங்களுடைய புகாரை தெரிவிக்கலாம்.
சமூக வலைதளத்தின் குறைதீர்வு அதிகாரியின் உத்தரவு வெளியிடப்பட்டதில் இருந்து, ௩௦ நாட்களுக்குள், இந்த இணையதளத்தில் புகார் செய்யலாம்.இந்த வசதியை துவக்கி வைத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளதாவது:
புதிய அமைப்பு
இணையதள பயன்பாடு வெளிப்படையாகவும், திறந்த புத்தகமாகவும் இருக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த தீர்ப்பாயம் அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களின் குறைதீர்வு அமைப்புகள் முறையாக செயல்பட வேண்டும்; மக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.
ஒருவேளை இதில் தீர்வு ஏற்படாத நிலையில், பயனாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை இந்த புதிய அமைப்பு உறுதி செய்யும்.
இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவில் திருப்தி இல்லாதபட்சத்தில் நீதிமன்றங்களை நாடலாம். இந்த தீர்ப்பாயத்தின் வாயிலாக நீதிமன்றங்களில் அதிகளவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது குறையும்; தவிர்க்கப்படும்.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில், தீர்ப்பாயம் அளிக்கும் உத்தரவுகள் வெளியிடப்படும். இந்த தீர்ப்பாய நடைமுறை மிகவும் வெளிப்படையாக, நம்பிக்கையானதாக, பொறுப்பு உடையதாக இருக்கும்.
மேலும் மிக விரைவாக தீர்வும் கிடைக்கும். இது பயனாளர்களுக்கு பெரிய அளவில் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்