
சோஷியல் மீடியா சர்ச்சையில் மாரிமுத்து : தந்தைக்காக மகன் விளக்கம்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரில் பிற்போக்குத்தனம், ஆணாதிக்கம் கொண்ட ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து அதிக கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து ஆபாச புகைப்படங்களை பதிவிடும் ஒரு ட்விட்டர் பக்கத்தில், ஒரு பெண்ணின் புகைப்படத்தின் கீழ் தனது மொபைல் எண்ணை பதிவிட்டு கால் செய்ய சொன்னது போல ஸ்கிரீன்சாட்டுகள் வைரலானது.
இதனை வைத்துக்கொண்டு சிலர், அவரை வசைபாட ஆரம்பித்தனர். அதன்பிறகு சில மணிநேரங்களிலேயே அந்த அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டது. இதனால் திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நன்மதிப்பை பெற்ற நடிகரான மாரிமுத்து இதை உண்மையிலேயே செய்தாரா? என ரசிகர்கள் பலரும் குழம்பி போயிருந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாரிமுத்துவின் மகன் அகிலன் மாரிமுத்து விளக்கமளித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், தந்தையின் (மாரிமுத்து) உண்மையான டுவிட்டர் அக்கவுண்டை டேக் செய்து, 'எனது தந்தையின் மொபைல் எண்ணை பதிவிட்ட அந்த அக்கவுண்ட் போலியானது. என் தந்தையனுடையது அல்ல. அவரது செல்போன் எண் பொதுத்தளத்திற்கு எப்படியோ பரவிவிட்டது. அதை சிலர் தவறாக உபயோகித்துள்ளனர்' என்று குறிப்பிட்டு, தவறான செய்திகளை நீக்கமாறு கேட்டுள்ளார்.