கோவை: ‘தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.7 ஆயிரம் கோடி வர வேண்டி உள்ளது. ஜிஎஸ்டி மாடலில் மாற்றம் தேவை’ என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கோவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்த பேட்டி: ஜிஎஸ்டியை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கும் மேலாக ஒன்றிய அரசிடமிருந்து நிலுவை தொகை வர வேண்டி உள்ளது. மார்ச் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி 2020-21க்கான நிதி ஆகும். இது தவிர, மேலும் ரூ.3000 கோடிக்கும் மேலாக ஜிஎஸ்டி வர வேண்டி உள்ளது. மாதந்தோறும் வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையும் தாமதம் ஏற்படுகிறது.
ஜிஎஸ்டி மாடலில் மாறுதல் தேவை. ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வரக்கூடிய வழிமுறைகளை மிகவும் எளிதாக மாற்ற வேண்டும். மதுரையில் நடக்கக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து எடுத்துரைக்கப்படும்.
பட்ஜெட்டை பொறுத்தவரை முதல்வரின் உத்தரவுப்படி திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். கல்விக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கான உரிமைத்தொகை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். தமிழகத்தின் நிதியை பொறுத்த வரையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சரிவை சந்தித்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திலேயே நிதி பற்றாக்குறை குறைந்து வருகிறது. வருவாய் அதிகரித்துள்ளது. கடன் வாங்குவது குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
* அதானி விவகாரத்தில் ஆர்பிஐ, செபி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‘தொழில் அதிபர் அதானி பங்குகள் சரிந்து வருகின்றன. இது குறித்து நான் ஒரு நிதி அமைச்சராக பேசவில்லை. பங்குச்சந்தைகளில் பணிபுரிந்த அனுபவத்தில் பேசுகிறேன். இத்தனை ஆண்டு காலமாக பங்குச்சந்தையில் அதானி பங்குகள் குறித்து ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பாக ஆர்பிஐ, செபி போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. தற்போது தான் அதானி பங்குகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது என்பது இல்லை. பல ஆண்டுகளாகவே இந்த விவாதம் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் கூட குரல் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தற்போது தான் பூதாகரமாக எழுந்துள்ளது. ஒன்றிய அரசு இதற்கு பதில் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.