மதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி காவலர்களை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற போது காலில் துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸார் பிடித்தனர்.
மதுரை உலகனேரியை சேர்ந்த ரவுடி பாலமுருகன் என்ற டோராபாலா மீது கொலை, கொலை முயற்சி என 8 வழக்குகள் உள்ள நிலையில், பிப்ரவரி 22ம் தேதி வண்டியூர் அருகே ராஜிவ்காந்தி நகரில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உலகனேரியைச் சேர்ந்த ரவுடி வினோத் அவனது கூட்டாளிகளான மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொலையை அரங்கேற்றியது எப்படியென நடித்துக் காட்டுவதற்காக வினோத்தை, காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையிலான போலீஸார் அதிகாலை 5 மணியளவில் ராஜிவ்காந்தி நகருக்கு அழைத்துச் சென்றனர்.
நடித்துக் காட்டிக் கொண்டிருக்கும் போதே அங்கு ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்த வினோத், அருகிலிருந்த முதல்நிலை காவலர் சரவணகுமாரின் கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக, ஆய்வாளர் ராஜாங்கம் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வினோத்தின் வலது காலில் சுட்டுள்ளார்.
காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் மேற்கொண்டு ஓட முடியாமல் சுருண்டு விழந்த வினோத், மற்றும் அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலரை மீட்ட சக போலீஸார் இருவரையும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவல்துறையினரை ரவுடிகள் வெட்டி விட்டு தப்பியோட முயல்வதும், அவர்களை போலீஸார் சுட்டு பிடிப்பதும் தற்போது தொடர் கதையாக மாறி உள்ளது.