தமிழில் எழுதப்படாத பெயர் பலகைகள் மீது மை பூசி அழிப்போம்..!!

பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழை தேடி பரப்புரை பயணம் 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,சட்டமன்ற உறுப்பினர் கோ.க.மணி, பாவாணர் தமிழியக்கத்தின் அமைப்பாளர் முனைவர்.கு.திருமாறன், உலக திருக்குறள் பேரவை துணை தலைவர் திருக்குறள் சு.முருகானந்தம், எழுத்தாளர் ஜவஹர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? என தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழ் மொழி அழிந்து விடும் என யுனெஸ்கோ அறிவித்துள்ளதாக ஒரு கூட்டம் அவதூறு பரப்பி வருகிறது. ஆனால் யுனெஸ்கோ அவ்வாறு எதையும் கூறவே இல்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். நாம் தற்போது கொச்சை தமிழில் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

தமிழ் வளர்ச்சி துறையும், தொழிலாளர் நலத்துறையும் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி, வணிக நிறுவன பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த முறை திருச்சிக்கு வரும் போது தமிழில் பெயர் பலகை வைத்துள்ள வணிகர்களுக்கு மலர் கொத்து கொடுத்து பாராட்டுவேன். தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் அனைவரும் தங்கள் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

பெயர்பலகையில் 5 பங்கு தமிழ் மொழியிலும், மூன்று பங்கு ஆங்கில மொழியிலும், 2 பங்கு அந்த வணிகர் விரும்பும் மொழியிலும் பெயர் பலகை வைத்துக்கொள்ள சட்டம் உள்ளது. அந்த சட்டப்படி பெயர் பலகைகளை வணிகர்கள் மாற்றி அமைக்காவிட்டால், கருப்பு மை கொண்ட வாளியையும், ஏணியையும் தூக்கி கொண்டு வருவோம். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. பிற மொழி கலக்காமல் ஒரு மொழியில் பேச வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். தமிழை தேடிய எனது பயணத்தை வாழ்த்தி வழியனுப்ப வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.