“தமிழில் எழுதாவிட்டால் தாரில் அழிக்கும் போராட்டம்” – வணிக நிறுவனங்களுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

திண்டுக்கல்: “தமிழ் மொழி அழிந்தால் தமிழ் இனமே அழியும். இதன் உண்மைத் தன்மையை பலரும் அறியவில்லை. அதனால்தான் இந்த பரப்புரையை மேற்கொண்டுள்ளேன்” என்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் தலைவர் ராமதாஸ் பேசினார். மேலும், தமிழ்ப் பெயர் பலகை தொடர்பாக வணிக நிறுவனங்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘தமிழைத்தேடி’ பரப்புரை பயண பொதுக்கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பா.ம.க., கவுரவத் தலைவர் கோ.க.மணி தலைமை வகித்தார். உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் கு.செல்லமுத்து, பேராசிரியர் பழனித்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்வில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: “தமிழ்நாட்டில் வீடுகளில் பேசக் கூடிய பத்து வார்த்தைகளில் ஐந்து வார்த்தை தமிழ் மொழி, மற்றவை ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் பேசும் நிலைமை தற்பொழுது உள்ளது. இதனை மாற்ற குழந்தைகளில் இருந்தே பள்ளிக்கூடம் மற்றும் வீடுகளில் முழுமையாக தமிழில் பேச கற்றுத் தர வேண்டும்.

உயிருக்கு உயிரான தமிழ் மொழியை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கின்றோம். வேகமாக அழிந்து கொண்டிருக்கின்றது. தமிழ் இனி மெல்லச் சாகும் என நீலகண்ட சாஸ்திரிகள் சொன்னபோது, பாரதியார் வெகுண்டெழுந்து கவிதை பாடினார்.

தமிழ் மொழியை காக்கத்தான் இந்தப் பரப்புரை பயணம். தமிழ் மொழி அழிந்தால் தமிழ் இனமே அழியும். இதன் உண்மைத்தன்மையை பலரும் அறியவில்லை. அதனால்தான் இந்த பரப்புரையை மேற்கொண்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம், வெங்கட்ராமன் உள்ளிட்ட பல பேரறிஞர்கள் தமிழில்தான் படித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து படிப்புகளும் தமிழில் படிக்க முடியும். தமிழை கட்டாய பாடமொழியாக வேண்டும் என அரசு சட்டங்கள் போட்டாலும் ஒரு சில பள்ளிகள் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்.

தமிழை அழிக்க உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு செல்லாதீர்கள் என பள்ளி நிர்வாகத்தை பார்த்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கேட்டுக் கொள்வோம். அதை மீறி அவர்கள் சென்றால் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களை சும்மா விட மாட்டார்கள். நான் வன்முறை தூண்டுவதற்காக இதை பேசவில்லை. தமிழகத்தில் கல்வியை வணிகம் செய்து வருகின்றனர். அதற்கு பள்ளிகளை மூடிவிட்டு பொறி கடலை வியாபாரம் செய்யலாம்.

எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் எழுதாவிட்டால், தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்குள் மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.