சென்னை, பெரியமேடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான மூர் மார்க்கெட் சந்திப்பில், நேற்று போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சந்தேகத்துக்கிடமான வகையில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து, விசாரணை செய்தனர். அதில், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் சீட்டில் 6 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. திடீரென அந்த 3 நபர்களும் ஓட முயற்சி செய்ய, போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்தனர்.

பின்னர், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து அந்த நபர்களை விசாரித்ததில், தாங்கள் சில தினங்களுக்கு முன்பு மீஞ்சூரில் ஒருவரைக் கொலைசெய்ததாகவும், எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்களை வெட்ட முயற்சிக்கலாம் என்பதால் தற்காப்புக்காக கத்திகளை வைத்திருந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாக பதற்றத்துடன் தெரிவித்திருக்கின்றனர்.

அதில் சந்தேகமடைந்த போலீஸார் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ராஜா ( 23), அதே பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு (19), சத்திவேல் (19) ஆகியோரிடம் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெரியமேடு பகுதியில் ஒருவரைக் கொலைசெய்வதற்கு வந்ததாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர்.
கொலைசெய்வதற்காக இருசக்கர வாகனத்தை திருடிவந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆறுமுகம் ராஜா, டில்லி பாபு, சத்திவேல் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.