போடி அருகே அடகுபாறை மலையில் 2வது நாளாக தொடரும் தீ: அணைக்கும் பணி தீவிரம்

போடி: போடி அருகே அடகுபாறை மலையின் வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் 2வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் போடிமெட்டு, குரங்கணி உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த வரிசையில் குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் ஏலம், காபி, மிளகு, இலவம், மா, எழுமிச்சை, கொய்யா உள்ளிட்ட பல்வேறு விவசாய சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முந்தல் மலை அடிவாரத்தில் இருந்து குரங்கணி மலைச்சாலையில் உள்ள பிச்சாங்கரைக்கு அடுத்ததாக அடகுபாறை என்ற மலைப்பகுதி அமைந்துள்ளது.

இங்கு விவசாயம் நடைபெறாத இடங்களில் புற்கள் அதிக அளவில் வளர்வது வழக்கம். இதன்படி தற்போது கோடைகாலம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று இரவு அடகுபாறை உச்சியில் உள்ள புற்களில் திடீரென தீப்பற்றியது. இப்பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் இந்த புற்கள் பரவி இருப்பதால் தீ வெகு வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தீ தொடர்ந்து பரவாமல் 2வது நாளாகஅணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.