மருத்துவத் துறையில் முன்னோடி; ஸ்டாலின் ஆட்சியில் ’தமிழ்நாடு' புதிய எழுச்சி!

தமிழ்நாடு முதல்வராக
மு.க.ஸ்டாலின்
பொறுப்பேற்ற 2021 மே மாதம் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு சுமார் 30 ஆயிரமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த உடனேயே நோய்த்தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் ஒருபுறம், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துதல் மறுபுறம் என ஸ்டாலின் வேகம் காட்டினார். தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி பொறுப்பேற்றது உறுதியான உடனேயே பணிகளை தொடங்கிவிட்டார்.

கொரோனா நெருக்கடி

பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு, போதிய மருந்துகளை இருப்பு வைத்தல், மத்திய அரசிடம் மருத்துவத் துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து பெறுதல், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ளுதல், படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை முடுக்கி விடுதல் என சூறாவளியாக சுழன்று வேலை செய்தார். இதற்கு பக்க பலமாக இருந்தவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Coronavirus

இதுதவிர அரசு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர் உடன் தொடர் ஆலோசனை, நேரில் சென்று களப்பணி என கொரோனாவை வென்றெடுக்க முனைப்பு காட்டினார். மக்களின் மருத்துவ தேவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ’வார் ரூம்’ என்ற பெயரில் சிறப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினார். இதன்மூலம் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு, எங்கு சென்றால் உடனடி அட்மிஷன் கிடைக்கும், அருகிலுள்ள மருத்துவமனைகள் என்னென்ன போன்ற விஷயங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்தே பெற்று வந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக பெறும் வகையில் உலகளாவிய டெண்டர் விட்டு கவனம் ஈர்த்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் ரெம்டெசிவர் மருந்துகளை மருத்துவமனைகள் மட்டுமே விநியோகிக்கும் வகையில் உத்தரவிட்டார். தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் ஸ்டாலின் சிறப்பு நடவடிக்கைகள் எடுத்தார். RT-PCR பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்தல் என கொரோனாவை கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

CM MK Stalin

கொரோனா நிவாரணம்

இதையடுத்து கொரோனா கட்டுப்பாடு காரணமாக மக்களின் துயர் துடைக்கும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்கினார். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் கட்டணத்தை காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று அறிவித்தார். தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கைகளால் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. அடுத்த மூன்று மாதங்களில் தினசரி பாதிப்புகள் பெரிதும் குறைந்தன.

2021ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுப்பாடுகளும் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டன. இதையடுத்து மருத்துவத் துறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு முக்கியமான திட்டங்களை சுட்டிக் காட்டலாம். இவை தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கின. பல்வேறு மாநில தலைவர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது.

Makkalai Thedi Maruthuvam

மக்களை தேடி மருத்துவம்

ஒன்று ’மக்களை தேடி மருத்துவம்’. இந்த திட்டத்தின் நோக்கம் மருத்துவ சேவைகள் மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக செல்வது தான். குறிப்பாக தொற்று இல்லாத நோய்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது. இதற்காக சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக நடமாடும் மருத்துவ சேவை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதைக் கொண்டு அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ சேவை கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48

மற்றொரு திட்டம் ’இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான செலவை அரசே மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை சிகிச்சை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 81 வகையான தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி சாலையோரங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, தனியார், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

Innuyir Kappom

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, இல்லாத நபர்கள், பிற மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் என அனைவருக்கும் வருமான வரம்பு எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. தமிழ்நாட்டின் எல்லைக்குள் சாலை விபத்துகள் நடந்தால் அதில் சிக்குவோருக்கு முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திட்டங்களும் சிறப்பான முறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பால் தமிழ்நாடு மருத்துவத் துறை நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.