மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கால நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

கரூர்: மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்க கால நீட்டிப்பு கிடையாது என்று கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 4ம்தேதி கரூர் வருகிறார். ரூ.267 கோடி மதிப்பிலான 1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 12 லட்சம்  மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைக்கிறார். பின்னர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்காக பொதுமக்களின் வேண்டுகோள் அடிப்படையில், கால நீட்டிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 2 கோடியே 67 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்னும்  1.50 லட்சம் பேர் மட்டுமே இணைக்க வேண்டி உள்ளது. பிப்ரவரி 28ம்தேதி (நேற்று) மாலையோடு, மின் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நிறைவுபெறுகிறது. இதற்கு பிறகு கால நீட்டிப்பு என்பது கிடையாது.  ஜல்லிக்கட்டை பொறுத்தவரை ஏற்கனவே, நடைபெற்ற மாவட்டங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கரூரில் இந்தாண்டுக்கான வாய்ப்புகள் குறைவு. அடுத்தாண்டு அனுமதி பெறுவதற்கான முயற்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.