மெனு! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் அது.

சரவணன்…, விடிகாலைத் துயில் எழுந்தான்.

குடில் கதவைத் திறந்தான்.

சீலீரென்று உள் நுழைந்த காற்றைச் சுவாசித்தான்.

வாசலில் வேப்ப மரம் படர்ந்து, செழித்து வளர்ந்து நின்றது.

தாழ்ந்து நின்ற கிளையிலிதுந்து குச்சி உடைத்தான்.

பற்களால் கடித்துத், துலக்கினான்.

-*****-

பானைத்தண்ணீர் எடுத்துப் பருகினான்.

வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டிக் கொண்டான்.

மாட்டுத் தொழுவம் சென்றான்.

கவணையிலிருந்து இழுத்துப் பரத்திய வைக்கோலைத் திரட்டி மீண்டும் கவணைக்குள் போட்டான்.

சாணத்தைத் தட்டுக் கூடையில் அள்ளி, தொழு உரக் குழியில் கொட்டினான்.

கன்றை அவிழ்த்துவிட்டான்.

முட்டி முட்டிக் குடித்தது கன்று.

சுரப்பு இறங்கியதும், கன்றை இழுத்துக் கட்டிவிட்டு ‘சர் சர் சர்..எனப் பால் பீய்ச்சினான்.

கையில் பிசுபிசுத்த விளக்கெண்ணைப் பிசுபிசுப்பை பசுவின் முதுகில் தட்டித் தடிவினான்.

-*****-

முண்டாசுத் தலை, தோளில் தொங்கிய மண்வெட்டியுடன், கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் கடந்து உள்ள தன் வயலுக்கு வரப்புகள் வழியாக நடந்தான்.

கூடவே ஓட்டிச் சென்ற பசுவையும் கன்றையும், அல்லியும் தாமரையும் போட்டி போட்டுக்கொண்டு அலங்கரிக்கும் அய்யனார் குளத்தில் குளிப்பாட்டிக் கரையேற்றினான்.

மந்தைக் கரையில் மேய விட்டான்.

மேய்ந்து விட்டு அவை மதியம் வீட்டுக்கு வந்துவிடும்.

வயற்காட்டை நோக்கித் தொடர்ந்து நடந்தான்.

தளதளவென்ற பசுமையான பயிர்களின் தலையாட்டல்களும், அந்தத் தலையாட்டல்களுக்குக் காரணமான தென்றல் காற்றிலும் தன்னை மறந்தான்.

“கும்பிடுறேண்ணே…!”

“தம்பி, நம்ப வயல்ல தண்ணி ரொம்பிருச்சு. இப்பத்தான் பாத்துட்டு வாரேன்…”

Representational Image

“புள்ளைவ நல்லாருக்கா?”

இப்படிப் பட்ட வெள்ளந்தியான கேள்விகளும், விசாரிப்புக்களும், பேச்சுக்களும் மனைதை நிறைக்கத், தொடர்ந்து நடந்தான்.

வரப்போரக் குறும்பூக்கள் பாதங்களை வருட, இரவு பெய்த பனித்துளிகள் கால்களில் சிலிர்க்க தன் வயலைச் சுற்றி வந்தான்.

தண்ணீர் போதும் என்று தோன்ற, பாசன வாயை அடைத்தான்.

மெழுகுப் பதமான களிமண்ணை காலால் மிதித்து மிதித்து அழுத்தமாக அடைத்தான்.

மண்வெட்டி இலையைக் கன்னி வாய்க்காலில் விட்டு கையில் சுருட்டிய வைக்கோல் கற்றையால் தேய்த்துக் கழுவினான்.

-****

சூரியனின் இடத்தையும், பரவிக்கிடந்த நிழலையும் வைத்துத், துல்லியமாய் நேரம் கணித்தான்.

நிதானமாய் வீடு திரும்பினான்.

“மடையடைச்சாச்சா..?”

மனைவியின் கேள்விக்கு பதில் சொன்னான்.

சைக்கிளை எடுத்து நடைபாதையில் வைத்துத் துடைத்தான்.

‘ஹப்’, ‘பெடல்’,’கோன்’… எனத் தேவையான இடங்களுக்கு ஆயில் கேன் எடுத்து உயவு எண்ணைச் சொட்டினான்.

ஒரு முறை சைக்கிளை சுற்றி வந்து பார்த்தான்.

‘அனைத்தும் முடிந்துவிட்ட திருப்தி தெரிந்தது அவன் முகத்தில். சைக்கிளை நகர்த்தி வழக்கமான இடத்தில் வைத்தான்.

-*****-

கிணற்றுக்குள் வாளியை விட்டான்.

“கீச் கீச் கீகீ…” எனக் கத்தியது ஜகடை.

கிளி, தவிட்டுக்குறுவி, மைனா, போன்ற பறவைகள் ஜகடைச் சத்தத்தைக் கேட்டுப் பயந்து, எகிறி ஓட ஆரம்பித்தன.

உள் விட்ட வாளியை வெளியே இழுத்தான்.

உள்ளே சென்று எரவானத்தில் வைத்திருந்த கிரீஸ் டப்பாவைக் கொண்டு வந்தான்.

தாத்தா, வெற்றிலையில் தடவச் சுண்ணாம்பு எடுக்கும் வாகில், வலது ஆள்காட்டி விரலால் அளவாக கிரீஸ் எடுத்தான்.

ஜகடை இடுக்கில் தேவையான அளவுக்கு கிரீஸ் வைத்தான்.

கையில் ஜகடையைப் பிடித்து முன்னும் பின்னுமாய் சுற்றி, உயவுச் சத்தம் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.

நீரைச் சேந்திச் சேந்தி, அண்டா, குண்டா, பக்கெட் என எல்லாவற்றிலும் ரொப்பினான்.

துவைக்கும் கல்லில், ‘விஷ் விஷ் விஷ். எனக் கும்மினான்.

.’கும்மிக் கும்மிப், ‘பட் பட்’ டெனத் துணிகளைத் துவைத்தான்.

பக்கெட் பக்கெட்டாகச் கிணற்றிலிருந்து சேந்திச் சேந்திக் குளிரக் தலையில் ஊற்றிக் குளிரக் குளித்தான்.

ஸ்வாமி மாடத்தின் முன் நின்றான்.

வணங்கினான்.

-****-

சோறு

சாணி மெழுகப்பட்டத் தரையில் தயாராகப் போடப்பட்டிருந்தக், கோரைத் தடுப்பில் அமர்ந்தான்.

பெரிய மண் தட்டில் பிழிந்து வைக்கப்பட்டிருந்தது பழைய சோறு.

பழைய சோற்றில் தேவையான உப்பிட்டான்.

கடைந்த நீர் மோரை, அளவாக ஊற்றிப் பிசைந்தான்.

சிறிய மண் தட்டில் உரித்து வைக்கப்பட்டிருந்தது , சின்ன வெங்காயம்.

அதில் ஒன்றை எடுத்துக் கடித்தான்.

நிதானமாக மென்று உண்டான்.

***

ட்ரங்க் பெட்டியிலிருந்து உத்தியோகச் சீருடையை எடுத்து அணிந்தான்.

“நான் பொறப்படறேன்..?

“ம்..”

சாயங்காலம் திரும்பயில டவுன்லேந்து ஏதும் வாங்கியாரணுமா?” பொறுப்பாய் கேட்டான்.

“எல்லாம் இருக்குதுங்க..”

சொல்லியபடியே வந்து, வாசல் தட்டி திறந்தாள் அவன் மனைவி.

சகுனம் பார்த்தான்.

சீக்கிரம் புறப்படுங்க என்றாள்.

சைக்கிளை நிதானமாக ஒட்டிக்கொண்டு சென்றான்.

போகிற வழியில் அவனுக்கு அறிமுக மானவர்கள் வணக்கம் சொன்னார்கள்.

உத்யோக வளாகத்தை அடைந்தான்.

பல லட்சக் கணக்கான விலை பொருத்தக் கார்களுக்கெல்லாம் இடைஞ்சல் இல்லாம், பின் கட்டில் இருந்த ஒரு மரத்தடியில் தன் சைக்கிளை நிறுத்தினான்.

ரிசப்ஷனுக்கு வந்தான்.

-****-

Representational Image

அவன் வேலை பார்க்கும் ‘ஸ்டார் ஹோட்டல்’ மேனேஜர்க் கு ‘வணக்கம்’ சொன்னான்.

அவர் சொன்னதைக் காதில் வாங்கினான்.

“சரிங்கய்யா?”

சொல்லிக் கொண்டே உள்ளே சென்றான்.

உயரத்திற்கு, ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துக் கொண்டான்.

கல்லாவில் முதலாளி எடுத்து வைத்த , கலர் சாக்பீஸ் டப்பாவை மறு கையில் எடுத்துக் கொண்டான்.

-*****-

மேனேஜர் சொன்ன ஐட்டங்களை மனசுக்குள் கொண்டு வந்தான்.

முதல் நாள் எழுதிப் போட்டவைகளை ஈரத் துணியால் சுத்தமாக அழித்தான்.

வகை வகையான அன்றைய மெனுவை வண்ண வண்ணமான கலர் சாக்கட்டிகளால் எழுதிப் போட்டான் சரவணன்.

வெங்காயமும், பழைய சோறும் கலந்த ஏப்பம் வந்தது அவனுக்கு.

*******

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.