யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவு தொடர்பில், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டதினால் எரியூட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரு காரணமாக தொடந்து தெல்லிப்பழையில் எரிப்பதில் இடர்பாடான நிலை காணப்படுகிறது.

இப்போது நாம் வைத்தியசாலைக்கு என தனியான ஓர் எரியூட்டி இயந்திரத்தைப் பெற்று வைத்தியசாலைக்கு அண்மையில் பொருத்தி பாவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.  யாழ்ப்பாண மாநகர சபையுடன் கலந்துரையாடி கோம்பையன் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அதனை அமைத்து செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

 வடக்கு மாகாண ஆளுநருடன் இந்த விடயம்தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும், அதேபோல் அந்த நிலைமை கைகூடும் வரை வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை தனியார் நிறுவனங்கள் மூலம் எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர்  தெரிவித்தார்.

குறிப்பாக எரியூட்டி நிலையத்தை அமைத்து அதனை செயற்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படும். அதேபோல மருத்துவக் கழிவுகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வைத்தியசாலைகளில் தேங்க விடாது தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து எரிப்பதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மருத்துவ கழிவுகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. வழமைபோல் பொதுமக்கள் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொள்ள முடியும் எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.